ஏழைகளுக்கு ரூ.2 ஆயிரம் நிதி வழங்க தடை கோரிய மனு தள்ளுபடி மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

ஏழைகளுக்கு ரூ.2 ஆயிரம் நிதி வழங்க தடை கோரிய மனுவை மதுரை ஐகோர்ட்டு நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Update: 2019-03-04 23:15 GMT

மதுரை,

மதுரையை சேர்ந்த தினேஷ்பாபு, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:–

தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 11–ந்தேதி தமிழக சட்டசபையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள 60 லட்சம் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு சிறப்பு நிதியாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் எனவும், கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக இந்த திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் அறிவித்தார். கடந்த பிப்ரவரி 24–ந்தேதி தொடங்கிய, இந்த திட்டம் பிப்ரவரி 28–ந்தேதிக்குள் நிறைவடையும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 4 நாட்களில் உரிய பயனாளிகளைக் கண்டறிந்து இந்த திட்டத்தின் கீழ் ரூ.2 ஆயிரத்தை வழங்குவது என்பது சாத்தியமல்ல. மேலும் கஜா புயல் பாதிப்பு தமிழகம் முழுவதும் ஏற்படாத நிலையில், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள அனைவருக்கும் கஜா புயல் பாதிப்பை காரணம் காட்டி இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள இந்த சூழ்நிலையில் வாக்காளர்களை கவரும் விதமாகவும், அவர்களின் கவனத்தை அ.தி.மு.க.வை நோக்கி திருப்பும் விதமாகவும் இந்த அறிவிப்பு உள்ளது. ஏற்கனவே பொங்கல் பண்டிகைக்கு அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் ஆயிரம் ரூபாய் அறிவித்து வழங்கப்பட்ட நிலையில், அது தொடர்பான கோர்ட்டு உத்தரவு முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. எனவே நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பின் உண்மையான பயனாளிகளை கண்டறிந்து ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதியை வழங்க வேண்டும். அதுவரை இந்த திட்டத்தை நிறுத்தி வைக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. முடிவில், மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்