காணாமல் போன மீன்வியாபாரியை கண்டுபிடிக்க பறக்கும் கேமரா மூலம் தேடுதல் வேட்டை

காணாமல் போன மீன்வியாபாரியை கண்டுபிடிக்க பறக்கும் கேமரா மூலம் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

Update: 2019-03-04 23:35 GMT

புதுச்சேரி,

புதுச்சேரி மாநிலம் வி.தட்டாஞ்சாவடியில் உள்ள காந்திநகரைச் சேர்ந்தவர் கணேசன்(வயது 55), மீன் வியாபாரி. இவர் மீன் வாங்குவதற்காக நேற்று முன்தினம் அதிகாலை 2 மணிக்கு தனது வீட்டில் இருந்து மொபட்டில் புறப்பட்டு தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுகத்திற்கு சென்றார். அங்கு அவர் எதிர்பார்த்த மீன் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே அவர் அங்கு மீன் வாங்காமல் பெரிய மார்க்கெட்டுக்கு புறப்பட்டு சென்றார். ஆனால் அவர் அங்கு சென்று சேரவில்லை.

இதற்கிடையே உப்பளத்தில் இருந்து தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுகத்திற்கு செல்லும் வழியில் சாலையோரம் உள்ள புதரில் அவரது மொபட் மற்றும் லுங்கி, சட்டை ஆகியவை ரத்தக்கறையுடன் கிடந்தது. மேல் சட்டையில் வைக்கப்பட்டு இருந்த ரூபாய் நோட்டுகளை காணவில்லை. அவர் எப்போதும் சட்டைப்பையில் ரூ.25 ஆயிரம் வரை வைத்திருப்பது வழக்கம்.

இது குறித்து முதலியார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி, சப்–இன்ஸ்பெக்டர் ராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு அந்த பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தினர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில் நேற்று 2–வது நாளாக போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர். கணேசன் காணாமல் போன இடத்தில் முட்புதர்களும், சதுப்பு நில காடுகளும் உள்ளன. எனவே அந்த பகுதியில் ஆட்கள் நுழைந்து தேட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நேற்று காலை 2 பறக்கும் கேமராக்கள் கொண்டு வரப்பட்டு அதன் மூலம் தேடுதல் பணி நடந்தது. போலீசார் மற்றும் ஊர் பொதுமக்கள் 50–க்கும் மேற்பட்டோர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

கணேசன் காணாமல் போன இடம் துறைமுகத்தை ஒட்டியுள்ள பகுதி என்பதால் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகள், அதனை ஒட்டியுள்ள குட்டைகளிலும் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர். இதற்கிடையே அவரது மொபட், துணிகள் கிடந்த இடத்தின் அருகில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகளை போலீசார் பார்வையிட்டனர்.

அதில் அதிகாலையில் கணேசன் மொபட்டில் செல்வது போன்ற காட்சி பதிவாகி உள்ளது. அவரை பின்தொடர்ந்து சிவப்பு நிற கார் ஒன்றும் செல்வது பதிவாகி உள்ளது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே மீன் விற்பனை செய்யும் இடத்தில் கணேசனிடம் மாமூல் கேட்டு ரவுடி ஒருவர் மிரட்டியது தெரியவந்தது. எனவே அவர் கடத்தி கொலை செய்யப்பட்டாரா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கடந்த ஒரு வாரமாக யார் யாரிடம் செல்போனில் பேசியுள்ளார்?, சம்பவத்தன்று யார் யாரிடம் அவர் பேசியுள்ளார் என்பது போன்ற விவரங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவருக்கு யார் யாருடன் தொழில் போட்டி இருந்தது, சமீப காலத்தில் எந்தெந்த பிரச்சினைகளில் அவர் தலையிட்டுள்ளார் என்பது உள்பட பல்வேறு விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்