கடலூர் மாவட்ட அ.தி.மு.க.வில் கோஷ்டி மோதல், சாலை மறியலில் ஈடுபட்ட அமைச்சர் - எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் 475 பேர் கைது

கடலூர் மாவட்ட அ.தி.மு.க. வில் கோஷ்டி மோதல் எதிரொலியாக பண்ருட்டியில் மறியலில் ஈடுபட்ட அமைச்சர்-எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் 475 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-03-05 22:45 GMT
கடலூர்,

கடலூர் மாவட்டத்தில் அ.தி.மு.க.வினர் இரு கோஷ்டிகளா தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருகிறார்கள். பண்ருட்டி அருகே உள்ள ஒறையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று முன்தினம் மருத்துவ முகாம் நடைபெற்றது. அப்போது அமைச்சர் எம்.சி.சம்பத்தின் ஆதரவாளர்களுக்கும், பண்ருட்டி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சத்யா பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் புதுப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. கட்சி அலுவலகம் சூறையாடப்பட்டது.

இதுகுறித்து இருதரப்பினரும் தனித்தனியாக கொடுத்த புகாரின்பேரில் புதுப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் அமைச்சரின் ஆதரவாளர்கள் நேற்று காலை 11 மணியளவில் நகர செயலாளர் தாடி முருகன் தலைமையில் பண்ருட்டி நான்கு முனை சந்திப்பில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் அ.தி.மு.க.அலுவலகத்தை தாக்கியவர் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி கோஷம் எழுப்பினர்.

இதையடுத்து பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) ஜவகர் மற்றும் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட அமைச்சரின் ஆதரவாளர்கள் 200 பேரை கைது செய்து வேனில் ஏற்றி திருவதிகையில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

அமைச்சரின் ஆதரவாளர்களை கைது செய்து அனுப்பி வைக்கப்பட்ட சிறிது நேரத்தில் எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் முன்னாள் நகரசபை தலைவர் பன்னீர்செல்வம் தலைமையில் மறியலில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து அமைச்சரை நீக்கி விட்டு வேறு ஒருவரை நியமிக்க வேண்டும், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை தூண்டிவிடுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று கூறி கோஷமிட்டனர். இதையடுத்து பொதுமக்களுக்கு இடையூறாக மறியலில் ஈடுபட்ட எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் 275 பேரை போலீசார் கைது செய்து சென்னை ரோட்டில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

மேலும் செய்திகள்