மதுக்கடைகளின் எண்ணிக்கையை குறைக்கக்கோரி பட்டுக்கோட்டையில் விவசாயி ‘திடீர்’ உண்ணாவிரதம்

மதுக்கடைகளின் எண்ணிக்கையை குறைக்கக்கோரி பட்டுக்கோட்டையில் விவசாயி ஒருவர் திடீரென உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார்.

Update: 2019-03-05 22:45 GMT
பட்டுக்கோட்டை,

ராமநாதபுரம் மாவட்டம் அச்சுதன்வயல் கிராமத்தை சேர்ந்தவர் கருணாமூர்த்தி (வயது40). விவசாயி. இவருக்கு திருமணமாகவில்லை. இவர் பட்டுக்கோட்டை லட்சத்தோப்பு பகுதியில் தங்கி விவசாயம் பார்த்து வருகிறார். பால் கொள்முதல் விலையை உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள மதுக்கடைகளின் எண்ணிக்கையை உடனடியாக குறைக்க வேண்டும். மது விற்பனை நேரத்தை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று அங்கு உள்ள ஒரு தென்னந்தோப்பில் கருணாமூர்த்தி திடீரென உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.

அவருடைய போராட்டத்துக்கு இயற்கை மகாத்மா உழவர் குடும்ப மாநில துணைத்தலைவர் அசரப் அலி, நகர தலைவர் கோவிந்தராஜ் ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர்.

கோரிக்கைகள் நிறைவேறும் வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக கருணாமூர்த்தி கூறி உள்ளார். விவசாயி ஒருவர் திடீரென உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்