மாத வருமானம் ரூ.15 ஆயிரத்துக்கு குறைவாக இருப்பவர்கள் ஓய்வூதிய திட்டத்தில் சேர விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்

மாத வருமானம் ரூ.15 ஆயிரத்துக்கு குறைவாக இருப்பவர்கள் மாதாந்திர ஓய்வூதிய திட்டத்தில் சேருவதற்கு விண்ணப்பம் செய்யலாம் என்று கலெக்டர் சிவராசு தெரிவித்து உள்ளார்.

Update: 2019-03-05 23:00 GMT
திருச்சி,

பிரதமர் நரேந்திர மோடி நேற்று ‘பிரதம மந்திரி ஷ்ரம்யோகி மான்தன்’ என்ற பெயரில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மாதாந்திர ஓய்வூதிய திட்டத்தை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சி திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய திட்டத்திற்கான அட்டையினை திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

திருச்சி மாவட்டத்தில் 1 லட்சத்து 50 ஆயிரம் அமைப்பு சாரா உறுப்பினர்கள் உள்ளனர். இதில் தெரு வியாபாரிகள், ரிக்‌ஷா தொழிலாளர்கள், கட்டிட தொழிலாளர்கள், வீட்டு வேலை செய்பவர்கள், விவசாய தொழிலாளர்கள், பீடி சுற்றும் தொழிலாளர்கள், நெசவாளர்கள், செருப்பு தைக்கும் தொழிலாளர்கள் போன்ற பல்வேறு பணிகளில் பணிபுரிபவர்களை அமைப்பு சாரா தொழிலாளர்களாக கருதலாம். அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு பிரதம மந்திரி ஷ்ரம்யோகி மான்தன் மூலமாக ஓய்வூதியம் வழங்கும் மிகப்பெரிய திட்டம் இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டமானது, அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான சமூகபாதுகாப்பு திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு அவர்களுக்கு மத்திய அரசாங்கத்தின் மூலம் ஓய்வூதியம் வழங்கப் படும்.

இத்திட்டத்தில் சேருவதற்கு குறைந்தபட்சம் 18 வயது, அதிக பட்சம் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். 18 வயது உடையவர்கள் ரூ. 55 மட்டும் மாத தவணை தொகை செலுத்த வேண்டும். இதற்கு ஈடான தொகையை மத்திய அரசு செலுத்தும். 40 வயது உடையவர்கள் ரூ. 200 மட்டும் மாத தவணை செலுத்த வேண்டும். இதற்கு ஈடான தொகையை மத்திய அரசு செலுத்தும். இத்திட்டத்தில் இணையும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் ஒரு சிறு தொகையை மாதாந்திர சந்தாவாக தங்களின் பணிக்காலத்தில் செலுத்துவதன் மூலம் 60 வயதை கடந்த பின்னர் அவர்களுக்கு மாதந்தோறும் நிலையான ஓய்வூதியமாக ரூ.3 ஆயிரம் வழங்கப்படும். மத்திய அரசு இத்திட்டத்திற்காக தொழிலாளர்கள் செலுத்தும் சந்தாவிற்கு இணையான தொகையை தனது பங்காக மாதந்தோறும் தொழிலாளர்களின் ஓய்வூதிய கணக்கில் செலுத்தும். அரசின் சந்தா தொகை முழுவதையும் இந்திய அரசாங்கம் செலுத்தும்.

60 வயதை கடந்த ஓய்வூதியம் பெறும் அமைப்பு சாரா தொழிலாளர்களின் இறப்பிற்குப் பிறகு அவரின் கணவன், மனைவிக்கு 50 சதவீதம் குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்.

முறையாகச் சந்தா செலுத்தும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் 60 வயதுக்கு முன்பாக இறக்க நேரிட்டால் அவரின் கணவன், மனைவி இந்த திட்டத்தில் இணைந்து தொடர்ந்து சந்தா செலுத்த இயலும். தொழிலாளர்கள் மற்றும் அவரின் துணைவர் இறப்பிற்கு பிறகு தொகை முழுவதும் இந்தத் திட்டத்தின் நிதியில் வரவு வைக்கப்படும். இத்திட்டத்திற்காக இணையம் மற்றும் செல்போன் செயலி மூலமாக சுய சான்றிதழ் வழங்கும் வசதி செய்யப்பட உள்ளது. மாத வருமானம் ரூ.15 ஆயிரத்திற்கு கீழ் இருக்க வேண்டும். இந்த ஓய்வூதிய திட்டத்தில் சேர்வதற்கு ஆதார் அட்டை, சேமிப்பு வங்கி கணக்கு அவசியமான ஒன்றாகும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் வருங்கால வைப்புநிதி மண்டல முதன்மை ஆணையர் வான்லால் மூவான், வருங்கால வைப்புநிதி அமலாக்க அதிகாரி சரவணபெருமாள், கூடுதல் தொழிலாளர் ஆணையர் ராதா கிருஷ்ண பாண்டியன், தொழிலாளர் இணை ஆணையர் தர்மசீலன் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்