புதுவையில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும், முதல்-அமைச்சர் நாராயணசாமி பேச்சு

ராகுல்காந்தி பிரதமராக புதுவையில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

Update: 2019-03-05 23:45 GMT
புதுச்சேரி,

புதுச்சேரி ரோஸ்மா திருமண நிலையத்தில் மாணவர் காங்கிரஸ் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாணவர் காங்கிரஸ் மாநில தலைவர் கல்யாணசுந்தரம் தலைமை தாங்கினார். கட்சியின் மாநில தலைவர் நமச்சிவாயம், அமைச்சர் கமலக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

சிறப்பான இந்தியாவை உருவாக்க வேண்டும் என்றால் அதில் மாணவர்களின் பங்கு இருக்க வேண்டும். அதற்காகத்தான் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி ‘சிறப்பான இந்தியா’ என்ற இயக்கத்தை தொடங்கியுள்ளார். மாணவர் காங்கிரசில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் தொடர்ந்து மக்கள் பணியை செய்து வந்தால் அவர்கள் அரசியலில் சிறப்பாக வர முடியும். மாணவர் காங்கிரஸ் இயக்கம் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை வேராக உள்ளது.

மாணவர்களால் தான் எதையும் சாதிக்க முடியும். அதற்கு உதாரணம் ஜல்லிக்கட்டு போராட்டம். ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டபோது சென்னை மெரினா கடற்கரை மற்றும் புதுவையில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வெற்றி கண்டனர். இதேபோல் புதுவையை தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என்று அறிவித்தபோது மாணவர்கள் போராட்டம் நடத்தி வெற்றி பெற்றனர். மாணவர் காங்கிரசார் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். நம் அனைவருக்கும் ஒரே தலைவர் ராகுல்காந்தி தான்.

புதுவை மாநிலத்தில் 30 ஆயிரம் கல்லூரி மாணவர்கள் உள்ளனர். பள்ளி, கல்லூரிகளை சேர்ந்து 1½ லட்சம் மாணவர்கள் உள்ளனர். 13 லட்சம் மக்கள் தொகை உள்ள புதுவையில் 1½ லட்சம் மாணவர்கள் உள்ளனர். மாணவர்கள் சக்தி மிகப்பெரிய சக்தி. மாணவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற இந்த அரசு நடவடிக்கை எடுக்கும்.

புதுவை மாநிலத்தில் மருத்துவம் மற்றும் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்களுக்கு அரசு இலவச கல்வி வழங்கி வருகிறது. மாணவர்கள் ஒவ்வொரு வீடாக சென்று பொதுமக்கள், விவசாயிகள், பெண்களை சந்தித்து ராகுல்காந்தி பிரதமராக வந்தால் ஏழை-எளிய மக்கள், நடுத்தர மக்கள், தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்களின் நலன்கள் பாதுகாக்கப்படும் என்று எடுத்து கூற வேண்டும். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ராகுல்காந்தி பிரதமராக வேண்டும் என்றால் புதுவை மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும். இதற்கு மாணவர்கள் காங்கிரஸ் கட்சியினர் இரவு பகல் பாராமல் பாடுபட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளர் சஞ்சய் தத், எம்.எல்.ஏ.க்கள் ஜெயமூர்த்தி, அனந்தராமன், அகில இந்திய மாணவர் காங்கிரஸ் தலைவர் நிராஜ், செயலாளர் ராகுல், புதுவை மாநில மாணவர் காங்கிரஸ் துணை தலைவர்கள் விக்ரமாதித்தன், சண்முகபிரியன், தமிழழகன், பொதுச்செயலாளர் தரணி மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் ‘சிறப்பான இந்தியா’ இயக்கம் தொடர்பான கையேட்டை முதல்-அமைச்சர் நாராயணசாமி வெளியிட்டார். அதனை அனைவரும் பெற்றுக்கொண்டனர்.

மேலும் செய்திகள்