திருவண்ணாமலையில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு சுருண்டு விழுந்து இறந்த மூதாட்டி

திருவண்ணாமலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. சுட்டெரிக்கும் வெயிலுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் மூதாட்டி ஒருவர் சாலையில் சுருண்டு விழுந்ததில் இறந்தார்.

Update: 2019-03-06 22:45 GMT

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளுக்குநாள் வெயிலின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. காலை 8 மணி முதலே வெயில் கொளுத்த தொடங்கி விடுகிறது. காலை 11 மணி முதலே அனல் கக்கும் அளவுக்கு வெயிலின் தாக்கம் காணப்படுகிறது. அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வெளியூர்களில் இருந்து வந்த பக்தர்கள் வெயிலின் தாக்கத்தால் சிரமப்படுகின்றனர்.பகல் நேரங்களில் கோவில் பகுதியை தவிர மற்ற இடங்களில் பொதுமக்கள் நடமாட்டம் குறைவாகவே காணப்படுகிறது.

வெயிலின் கொடுமையை சமாளிக்க போளூர் சாலை, செங்கம் சாலை, தண்டராம்பட்டு சாலை, திருக்கோவிலூர் சாலை போன்ற பல்வேறு சாலைகளில் இளநீர், நுங்கு, வெள்ளரி பிஞ்சு கடைகள் முளைத்து வருகின்றன. ஆங்காங்கே சாலையின் ஓரம் தர்பூசணி பழங்கள் குவிக்கப்பட்டு அதன் விற்பனையும் களைகட்டி வருகிறது. குளிர்பான கடைகளுக்கும் மக்கள் படையெடுத்து செல்கின்றனர். சாலையில் செல்பவர்கள் குடைபிடித்தபடியே செல்கின்றனர்.

திருவண்ணாமலையில் உள்ள கால்நடை மருத்துவமனை அருகே நேற்று காலை 9 மணி அளவில் 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி நடந்து சென்று கொண்டிருந்தார். வெயிலின் தாக்கத்தால் அவர் திடீரென மயக்கம் போட்டு சாலையின் ஓரம் விழுந்தார்.

இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் ஓடிச்சென்று அந்த மூதாட்டிக்கு முதலுதவி அளித்தனர். கீழே விழுந்ததினால் அவரின் தலையின் பின்புறம் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. இதையடுத்து அந்த மூதாட்டியை அவர்கள் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. அது குறித்து திருவண்ணாமலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கோடை வெயில் தொடங்கும் முன்னே அதன்தாக்கம் அதிகமாக உள்ளதால் மக்கள் கோடையை சமாளிக்க முடியுமா? என்ற கேள்வியுடன் புலம்ப தொடங்கி விட்டனர். இரவில் அனல் காற்று வீசுவதால் பலர் தூக்கத்தை தொலைத்து விட்டனர்.

மக்களின் எதிர்பார்ப்பு வருண பகவானை நோக்கி சென்று விட்டது. கோடை மழை பொழிய வேண்டும் என்று மக்கள் வேண்டுதலை தொடங்கி விட்டனர்.

மேலும் செய்திகள்