வருசநாடு அருகே, அரசு பஸ்சை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டம்

வருசநாடு அருகே அரசு பஸ்சை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

Update: 2019-03-06 23:00 GMT
கடமலைக்குண்டு,

வருசநாடு அருகே வாலிப்பாறை கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்திற்கு தேனி மற்றும் போடியில் இருந்து இரண்டு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. காலை நேரம் 8 மணியளவில் வாலிப்பாறை கிராமத்தில் இருந்து தேனிக்கு அரசு பஸ் புறப்பட்டு செல்வது வழக்கம். இந்த பஸ்சை பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லுபவர்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக காலை 8 மணியளவில் புறப்படும் பஸ் 7 மணிக்கே புறப்பட்டு சென்று விடுகிறது. வாலிப்பாறை கிராமத்திற்கு அடுத்த பஸ் மதியம் மட்டுமே உள்ளதால் மாணவ-மாணவிகள் கூடுதல் கட்டணம் செலுத்தி ஆட்டோ, வேன் உள்ளிட்ட வாகனங்களில் பள்ளி, கல்லூரிக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தேனியில் இருந்து வாலிப்பாறை கிராமத்திற்கு இரவு 7 மணிக்கு புறப்படும் அரசு பஸ் கடந்த சில நாட்களாக 9 மணிக்கு புறப்படுவதால் மாணவ-மாணவிகள் உரிய நேரத்திற்கு வீடு திரும்ப முடியவில்லை. இதனால் வாலிப்பாறை கிராம மக்கள் மிகவும் அவதிப்பட்டனர். இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் நேற்று காலை வாலிப்பாறை கிராமத்தில் அரசு பஸ்சை சிறை பிடித்தனர். தகவலறிந்த வருசநாடு சப்-இன்ஸ்பெக்டர் ராமபாண்டியன் மற்றும் போலீசார் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வாலிப்பாறை கிராமத்துக்கு சரியான நேரத்துக்கு அரசு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக போக்குவரத்துதுறை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். மேலும் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்துவோம் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். 

மேலும் செய்திகள்