வடலூரில் மீட்கப்பட்டார்: மீன் வியாபாரி கடத்தல் நாடகமா?

புதுவையில் மாயமான மீன் வியாபாரி வடலூரில் மீட்கப்பட்டார். கடத்தப்பட்டதாக அவர் நாடகம் ஆடுகிறாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2019-03-06 23:00 GMT
புதுச்சேரி,

புதுவை வி.தட்டாஞ்சாவடியை சேர்ந்தவர் கணேசன் (வயது 55). மீன் வியாபாரி. கடந்த 3-ந்தேதி அதிகாலையில் மீன் வாங்க தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுகத்துக்கு சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. திடீரென மாயமானார்.

மீன்பிடி துறைமுகத்துக்கு செல்லும் சாலையோரத்தில் அவரது மொபட் மற்றும் உடைகள், செல்போன் ஆகியவைகிடந்தன. அவரது உடைகளில் ரத்தக்காயம் இருந்ததால் கணேசன் கடத்தி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கருதப்பட்டது.

இதுகுறித்து முதலியார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் தீவிரமாக விசாரித்து வந்தனர். ஆள் இல்லா விமானம் மூலமும் தேடுதல் வேட்டை நடந்தது. ஆனாலும் கணேசனை பற்றி துப்பு துலங்கவில்லை. அவருடன் செல்போனில் பேசியவர்களை அழைத்து போலீசார் விசாரித்தனர். இதிலும் எந்த பலனும் கிடைக்கவில்லை.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு கணேசனின் மகளை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய ஒரு நபர் உங்கள் தந்தை வடலூரில் பஸ் நிறுத்தம் ஒன்றில் உள்ளார். அங்கு வந்து அழைத்து செல்லுங்கள் என்று கூறியதாக தெரிகிறது.

உடனே போலீசாரும், கணேசனின் குடும்பத்தினரும் வடலூர் சென்று பார்த்தபோது கணேசன் அங்கு இல்லை.

இதனால் மீண்டும் செல்போனில் பேசிய மர்ம ஆசாமி வள்ளலார் சபை அருகே கணேசன் இருப்பதாக தெரிவித்துள்ளார். அதன்படி அங்கு சென்று பார்த்தபோது கணேசன் இருந்தார். அவரை அங்கிருந்து போலீசார் மீட்டு புதுச்சேரிக்கு கொண்டு வந்தனர். பின்னர் புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

அவரிடம் போலீசார் விசாரித்தபோது, சம்பவத்தன்று 3 பேர் தன்னை தாக்கி காரில் கடத்தியதாகவும், அதற்கு பின் தனக்கு என்ன நடந்தது? என்று தெரியவில்லை என்று தெரிவித்தார். மீண்டும் மீண்டும் இந்த தகவலையே அவர் கூறினார். கடந்த 3 நாட்களாக அவர் எங்கிருந்தார்? என்பதற்கும் பதில் இல்லை. தொடர்ந்து போலீசாரை குழப்பும் விதமாகவே பதில் தெரிவித்தார்.

மீன் வியாபாரி கணேசன் ஏலச்சீட்டு நடத்தி வந்ததாகவும், பலருக்கு பணம் கொடுக்க வேண்டி இருந்ததால் கடத்தல் நாடமாடி இருக்கலாம் என்றும் தெரிகிறது. கணேசனை போலீசார் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்