திருவத்திபுரம் நகராட்சியில் 100 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் வியாபாரிகளுக்கு அபராதம்

திருவத்திபுரம் நகராட்சியில் தடை செய்யப்பட்ட 100 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 5 வியாபாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2019-03-07 22:30 GMT
செய்யாறு, 

தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் 1-ந் தேதி முதல் ஒருமுறை உபயோகப்படுத்தும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் ஒரு சில பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வியாபாரிகள் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

அதன்படி செய்யாறு டவுன் திருவத்திபுரம் நகராட்சி சார்பில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? என்று நகராட்சி துப்புரவு அலுவலர் எஸ்.பாலசுப்பிரமணியன், துப்புரவு ஆய்வாளர் மதனராசன் மற்றும் நகராட்சி பணியாளர்கள் நேற்று காந்தி சாலை, ஆற்காடு சாலை மற்றும் லோகநாதன் தெரு உள்ளிட்ட வியாபாரிகள் உள்ள முக்கிய தெருக்களில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வில் வியாபாரிகளிடம் இருந்து 100 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய 5 வியாபாரிகளுக்கு தலா ஆயிரம் வீதம் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு, வசூலிக்கப்பட்டது. மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வியாபாரிகளை அதிகாரிகள் எச்சரித்தனர்.

மேலும் செய்திகள்