ஆந்திராவில் இருந்து சென்னைக்கு மணல் கடத்தல்; 6பேர் கைது 2 லாரிகள் பறிமுதல்

ஆந்திராவில் இருந்து சென்னைக்கு 2 லாரிகளில் மணல் கடத்தி வந்த 6 பேரை போலீசார் கைது செய் தனர். லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2019-03-07 22:30 GMT
பெரம்பூர், 

சென்னை கொடுங்கையூர் போலீசார், நேற்று காலை கொடுங்கையூர், எம்.ஆர்.நகர் தண்டையார்பேட்டை நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படியாக வந்த 2 லாரிகளை நிறுத்தி விசாரித்தனர்.

லாரியில் இருந்த டிரைவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினர். இதனால் மேலும் சந்தேகம் அடைந்த போலீசார், லாரி மீது இருந்த தார்ப்பாயை அகற்றி சோதனை செய்தனர். அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட மணல் இருப்பது தெரியவந்தது.

ஆந்திராவில் இருந்து சென்னையில் உள்ள எம்.கே.பி.நகர், கொடுங்கையூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள வாடிக்கையாளருக்கு வினியோகம் செய்வதற்காக கடத்திவந்தது தெரிந்தது.

இதுகுறித்து கொடுங்கையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வேந்திரன் வழக்குப்பதிவு செய்து, மணலுடன் 2 லாரிகளை பறிமுதல் செய்தனர்.

மேலும் லாரி டிரைவர்களான தஞ்சாவூரை சேர்ந்த முனிகிருஷ்ணன் (வயது 45), திருவள்ளூரைச் சேர்ந்த முரளி (35) மற்றும் லாரியில் வந்த கிளனர்கள் ரவி, உதயகுமார், கூலி ஆட்களான பொன்னேரியை சேர்ந்த நடராஜன், சந்திரன் ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

2 லாரிகளில் இருந்தும் சுமார் 75 டன் மணல் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் இந்த மணல் யார் மூலம் கடத்திவரப்பட்டது?, இதில் வேறு யாரும் சம்பந்தப்பட்டு உள்ளனரா? எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்