கொசுவலை நிறுவனங்கள்- அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை கரூரில் பரபரப்பு

வரி ஏய்ப்பு புகாரை தொடர்ந்து, கரூரில் உள்ள பிரபல குழுமத்துக்கு சொந்தமான கொசுவலை நிறுவனங்கள் மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2019-03-07 23:15 GMT
கரூர்,

கரூரில் உள்ள ஒரு பிரபல குழுமத்துக்கு சொந்தமாக கொசுவலை நிறுவனம், பால்பண்ணை, பஸ்கள் உள்ளிட்டவை உள்ளன. இந்த நிலையில் அந்த குழுமத்துக்கு சொந்தமான கொசுவலை நிறுவனம் உள்ளிட்டவற்றில் வரி ஏய்ப்பு செய்திருப்பதாக திருச்சியில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்திற்கு புகார் வந்தது.

இதைத்தொடர்ந்து திருச்சியில் இருந்து கார்களில் 30-க்கும் மேற்பட்ட வருமானவரித்துறையினர் நேற்று இரவு 7 மணியளவில் கரூர் வந்தனர். அவர்கள், கரூர் அதிகாரிகளுடன் சேர்ந்து, தனித்தனி குழுக்களாக கரூர் மண்மங்கலம் சேலம் பைபாசில் சிப்காட்டில் உள்ள அந்த குழுமத்துக்கு சொந்தமான கொசுவலை நிறுவனம், சின்னஆண்டாங்கோவில் ரோடு சேரன் நகரில் உள்ள அலுவலகம், வீரராக்கியத்தில் உள்ள கொசுவலை நிறுவனம் உள்ளிட்டவற்றில் புகுந்து அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.

அப்போது கொசுவலை ஏற்றுமதி செய்யப்பட்டதற்கான ஆவணங்களை கொண்டு, அதற்கான பணப்பரிமாற்றத்தில் முறைப்படி வரி செலுத்தப்பட்டு இருக்கிறதா? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வரி ஏய்ப்பு தொடர்பான ஆவணங்கள் ஏதும் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா? என்று நிறுவனங்கள், அலுவலகத்தில் தீவிரமாக இரவு முழுவதும் சோதனை நடந்தது. இன்றும் (வெள்ளிக்கிழமை) சோதனை தொடரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சம்பவம் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்