அமலாக்கத்துறை வழக்கை ரத்து செய்ய கோரிய மந்திரி டி.கே.சிவக்குமார் மனு மீதான விசாரணை ஐகோர்ட்டில் தள்ளிவைப்பு

அமலாக்கத்துறை வழக்கை ரத்து செய்ய கோரிய மந்திரி டி.கே.சிவக்குமாரின் மனு கர்நாடக ஐகோர்ட்டில் தள்ளிைவக்கப்பட்டுள்ளது.

Update: 2019-03-07 22:30 GMT
பெங்களூரு, 

அமலாக்கத்துறை வழக்கை ரத்து செய்ய கோரிய மந்திரி டி.கே.சிவக்குமாரின் மனு கர்நாடக ஐகோர்ட்டில் தள்ளிைவக்கப்பட்டுள்ளது.

வருமான வரி சோதனை

நீர்ப்பாசனத்துறை மந்திரியாக இருப்பவர் டி.கே.சிவக்குமார். அவர் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் மின்சாரத்துறை மந்திரியாக இருந்தபோது, அவரது வீடுகள், அலுவலகங்கள், நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் வருமான வரி சோதனை நடைபெற்றது.

டெல்லியில் உள்ள அவரது வீட்டிலும் இந்த சோதனை நடந்தது. இதில் அங்கு கணக்கில் வராத ரொக்க பணம் கிடைத்தது. இதுகுறித்து அமலாக்கத்துறை, மந்திரி டி.கே.சிவக்குமார் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.

நேரில் ஆஜராகும்படி...

இந்த வழக்கில் விசாரணைக்காக நேரில் ஆஜராகும்படி கடந்த ஜனவரி மாதம் அவருக்கு அமலாக்கத்துறை நோட்டீசு அனுப்பியது. ஆனால் தன் மீதான அமலாக்கத்துறை வழக்கை ரத்து செய்ய கோரி கர்நாடக ஐகோர்ட்டில் மந்திரி டி.கே.சிவக்குமார் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனு மீது விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அந்த மனு கர்நாடக ஐகோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது டி.கே.சிவக்குமார் சார்பில் மூத்த வக்கீல் கபில்சிபல் ஆஜராகி வாதிட்டார்.

அதிகாரம் இல்லை

அவர் வாதிடுகையில், “இது வருமான வரி தொடர்பான விஷயம். இந்த விஷயத்தில் அமலாக்கத்துறை வழக்கு தொடுக்க அதிகாரம் இல்லை. அதனால் எனது கட்சிக்காரர் மீதான இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்” என்றார்.

அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வக்கீல், தங்களின் வாதத்தை எடுத்து வைக்க காலஅவகாசம் வேண்டும் என்று கோரினார். இதையடுத்து இந்த மனு மீதான விசாரணை வருகிற 11-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

பரிசீலிக்க வேண்டும்

இந்த இடைபட்ட காலத்தில் நேரில் ஆஜராகும்படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பினால், அதற்கு காலஅவகாசம் கோரி டி.கே.சிவக்குமார் மனு வழங்கலாம் என்றும், அதை அமலாக்கத்துறை பரிசீலிக்க வேண்டும் என்றும் நீதிபதி அறிவுறுத்தினார்.

மேலும் செய்திகள்