இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி தாலுகா அலுவலகங்களை கட்டிட தொழிலாளர்கள் முற்றுகை

இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி, கோவில்பட்டி, எட்டயபுரம் தாலுகா அலுவலகங்களை கட்டிட தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2019-03-07 23:03 GMT
கோவில்பட்டி, 

கட்டிட தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள், ஏழைகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா மற்றும் வீடு வழங்க வேண்டும். விபத்தால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும். கட்டுமான பெண் தொழிலாளர்களின் மகப்பேறு காலத்தில் 6 மாதம் சம்பளத்துடன் ஓய்வு வழங்க வேண்டும்.

60 வயதை கடந்த தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.6 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். இயற்கை மரண நிவாரணத்தொகையாக ரூ.5 லட்சமும், விபத்து மரண நிவாரணத்தொகையாக ரூ.10 லட்சமும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏ.ஐ.டி.யு.சி. கட்டிட தொழிலாளர் சங்கத்தினர் நேற்று கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

சங்க மாவட்ட துணை தலைவர் தமிழரசன், மாவட்ட செயலாளர் ஜானகி, மாவட்ட குழு உறுப்பினர் தங்கவேல் பாண்டியன், சங்கரப்பன் உள்பட ஏராளமான ஆண், பெண் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள், துணை தாசில்தார் ராமகிருஷ்ணனிடம் கோரிக்கை மனு வழங்கி விட்டு, கலைந்து சென்றனர்.

இதேபோன்று எட்டயபுரம் தாலுகா அலுவலகத்தை ஏ.ஐ.டி.யு.சி. கட்டிட தொழிலாளர் சங்கத்தினர் முற்றுகையிட்டனர். மாவட்ட பொறுப்பாளர்கள் நல்லையா, கிருஷ்ணமூர்த்தி, கங்காதேவி, ஜமுனா, வினோ ரஞ்சிதம், சுப்புராஜ், ஆவுடையப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் தெய்வ குருவம்மாளிடம் கோரிக்கை மனு வழங்கி விட்டு, கலைந்து சென்றனர்.

ஏ.ஐ.டி.யு.சி கட்டிட தொழிலாளர் சங்கம் சார்பில் விளாத்திகுளம் தாலுகா அலுவலக முற்றுகை போராட்டம் நடந்தது. சங்க தாலுகா செயலாளர் குணசீலன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் கணேசனிடம் கோரிக்கை மனு வழங்கி விட்டு, கலைந்து சென்றனர்.

வீடு இல்லாத தொழிலாளர்களுக்கு வீடு கட்டிக்கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஓட்டப்பிடாரம் கட்டுமான தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஏ.ஐ.டி.யு.சி. கட்டுமான தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் மகாராஜன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க செயலாளர் அசோக்குமார், மாவட்ட குழு உறுப்பினர்கள் செல்வராஜ், மந்திரகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில குழு உறுப்பினர் அழகு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் கிருஷ்ணமூர்த்தி, ஏ.ஐ.டி.யு.சி கட்டுமான தொழிலாளர் சங்க ஒன்றிய குழு உறுப்பினர்கள் முத்துமாரியப்பன், தங்கராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் கோரிக்கை மனுவை தலைமை இடத்து மண்டல துணை தாசில்தார் தங்கையாவிடம் கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர். 

மேலும் செய்திகள்