உலக மகளிர் தினத்தையொட்டி சாதனை படைத்தவர்களுக்கு விருது - கலெக்டர் சாந்தா வழங்கினார்

உலக மகளிர் தினத்தையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்களுக்கு விருதுகளை கலெக்டர் சாந்தா வழங்கினார்.

Update: 2019-03-08 22:45 GMT
பெரம்பலூர்,

பெண்ணின் மகத்துவத்தினை உலகிற்கு பறைசாற்றும் வகையில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் 8-ந் தேதி உலக மகளிர் தின விழா கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று நாடு முழுவதும் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளி, கல்லூரிகளில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. அப்போது பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளுக்கு, மாணவர்கள், ஆசிரியர்கள் மகளிர் தின வாழ்த்துக்களை கூறினர். இதே போல் மாணவிகளும், சக மாணவிகளுக்கு மகளிர் தின வாழ்த்துக்களை ஒருவருக்கொருவர் கூறி பரிமாறி கொண்டனர். சில பள்ளி, கல்லூரிகளில் மாணவிகளை பெருமைப்படுத்தும் விதமாக கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. மகளிர் தினத்தை முன்னிட்டு கவிதை, பேச்சு போட்டிகளும், கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு மாணவிகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டத்தில் கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பதவிகளில் பெண்கள் தான் பணிபுரிகிறார்கள் என்பது பெருமைப் பட கூடியது. பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உலக மகளிர் தின விழா கலெக்டர் சாந்தா தலைமையில் கொண்டாடப்பட்டது.பின்னர் கலெக்டர் சாந்தா பெரம்பலூர் மாவட்டத்தில் கல்வி, மருத்துவம், சுகாதாரம், விளையாட்டு, சமூக சேவை உள்ளிட்ட துறைகளில் சாதனை புரிந்த 11 பெண்களுக்கு சாதனையாளர் விருது வழங்கி பாராட்டினார். இதில் 4 மாற்றுத்திறனாளிபெண்களும் அடங்குவர். சிறந்த ஆசிரியைக்காக பாப்பாத்தி என்கிற மாற்றுத்திறனாளிக்கும், சிறந்த ஓட்டப்பந்தய வீராங்கனையாக அம்பிகா, தீபா, ரஞ்சீதா ஆகிய மாற்றுத்திறனாளிகளுக்கு சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியில் 43 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.3 கோடியே 39 லட்சம் நேரடிக் கடனும், நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் 13 குழுக்களுக்கு சுழல்நிதியாக ரூ.1 லட்சத்து 3 ஆயிரத்தையும் கலெக்டர் வழங்கினார். மாவட்ட அளவிலான சிறந்த மகளிர் சுய உதவிக்குழு மற்றும் ஊராட்சி அளவிலான குழுக் கூட்டமைப்புகளுக்கு விருது வழங்கப்பட்டது. முன்னதாக பல்வேறு துறைகளில் பணியாற்றும் பெண் அலுவலர்கள் கலெக்டரை சந்தித்து உலக மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்தனர். அவர்களுக்கு கலெக்டர் தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார்.

இதேபோல் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. மகளிர் தினத்தை முன்னிட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷாமித்தல் உள்பட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பணிபுரியும் பெண் போலீசார் அனைவரும் ஒரே நிறத்திலான புடவைகளை அணிந்து வந்தனர். அவர்களுக்கு திஷாமித்தல் ரோஜாப்பூ கொடுத்து மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்தார். பதிலுக்கு பெண் போலீசாரும், போலீஸ் சூப்பிரண்டுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர். பின்னர் போலீஸ் சூப்பிரண்டு முன்னிலையில் கேக் வெட்டி, பெண் போலீசாருக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து மதிய விருந்து போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வழங்கப்பட்டது. முன்னதாக பெண் போலீசார் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷாமித்தலுடன் புகைப்படம் எடுத்து கொண்டனர். 

மேலும் செய்திகள்