வேலூர் மாவட்டத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 3,061 வழக்குகளுக்கு தீர்வு

வேலூர் மாவட்டத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 3 ஆயிரத்து 61 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

Update: 2019-03-09 22:45 GMT

வேலூர், 

தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியுமான ஆனந்தி தலைமை தாங்கினார். முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி வெற்றிச்செல்வி, குடும்ப நல நீதிபதி லதா, சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் தாமோதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், கடந்த 2018–ம் ஆண்டு பஸ் மோதி பலியான சந்திப் தாயாருக்கு தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் இழப்பீடு தொகையாக ரூ.8 லட்சத்து 80 ஆயிரமும், மேலும் ஆற்காட்டை அடுத்த திமிரி அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதிய விபத்தில் படுகாயமடைந்த விவசாயி ஏழுமலைக்கு ரூ.6 லட்சத்து 81 ஆயிரமும் வழங்கப்பட்டது.

மக்கள் நீதிமன்றத்தில் வாகன விபத்து, வங்கி வராக்கடன், நிலமோசடி, தொழிலாளர் வழக்கு, குடும்பநல வழக்கு, காசோலை மோசடி உள்பட பல்வேறு வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. இதில், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி பாரி, தொழிலாளர் நீதிபதி செல்வசுந்தரி, கூடுதல் சார்பு நீதிபதி ராஜசிம்மவர்மன், மாவட்ட சட்டப்பணி ஆணைக்குழு நிர்வாக அலுவலர் சதீஷ்ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள 11 கோர்ட்டுகளில் நேற்று நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 6 ஆயிரத்து 677 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டு, அதில், 3 ஆயிரத்து 61 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன. அதன் மூலம் ரூ.9 கோடியே 25 லட்சத்து 11 ஆயிரத்து 463 இழப்பீடாக சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்