அனுமதியின்றி துப்பாக்கிகள் வைத்திருந்த விவசாயி கைது

பெரம்பலூரில் அனுமதியின்றி துப்பாக்கிகள் வைத்திருந்த விவசாயியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-03-09 23:00 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூர்-எளம்பலூர் சாலை முத்துநகர் பகுதியில் ஒருவர் அனுமதியின்றி துப்பாக்கிகள் வைத்திருப்பதாக பெரம்பலூர் போலீசாருக்கு நேற்று முன்தினம் மாலை ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரதிவிராஜ் தலைமையிலான போலீசார் அந்தபகுதிக்கு விரைந்து சென்று சோதனையிட்டனர். அப்போது அங்குள்ள உள்ள ஒரு கட்டிடத்தில் வசித்து வந்த பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா மலையாளப்பட்டியை சேர்ந்த வரதராஜன்(வயது 64) என்கிற விவசாயியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர் முன்னுக்கு, பின் முரணாக பதிலளித்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் வரதராஜனிடம் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில், அவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியில் வனவிலங்குகளை சுடுவதற்கு பயன்படுத்தப்படும் துப்பாக்கிகள் விற்கும் கடை வைத்திருந்தது தெரியவந்தது. தற்போதும் அங்கு வரதராஜன் அனுமதியின்றி துப்பாக்கிகள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வரதராஜனிடம் இருந்து சிங்கில், டபுள் பேரல் வகை துப்பாக்கிகள் இரண்டை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வரதராஜனை கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். 

மேலும் செய்திகள்