பணித்தள பொறுப்பாளரை இடமாற்றம் செய்யக்கோரி தொழிலாளர்கள் சாலை மறியல் செய்ய முயற்சி

விருத்தாசலம் அருகே பணித்தள பொறுப்பாளரை இடமாற்றம் செய்யக்கோரி தொழிலாளர்கள் சாலை மறியல் செய்ய முயன்றனர்.

Update: 2019-03-09 23:00 GMT

விருத்தாசலம்,

விருத்தாசலம் அருகே உள்ள பாலக்கொல்லை கிராமத்தில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தின் கீழ் தொழிலாளர்கள் பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர். இதற்காக அந்த கிராம மக்களே, தகுதியான தொழிலாளர்களை தேர்ந்தெடுத்து வேலை செய்து வருகின்றனர். தொழிலாளர்கள் வேலை செய்வதை கண்காணிப்பதற்காக பணித்தள பொறுப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆனால் பணித்தள பொறுப்பாளர், தகாத முறையில் பேசுவதாகவும், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் அடையாள அட்டை வழங்க பணம் வசூலிப்பதாகவும் தொழிலாளர்கள் அடுக்கடுக்கான புகாரை தெரிவித்தனர்.

மேலும் பணத்தள பொறுப்பாளரை இடமாற்றம் செய்யக்கோரி நேற்று மதியம் தொழிலாளர்கள் ஒன்று திரண்டு விருத்தாசலம்–பாலக்கொல்லை சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர். இதனிடையே இது பற்றி தகவல் அறிந்ததும் கம்மாபுரம் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் மற்றும் ஆலடி போலீசார் விரைந்து வந்து, தொழிலாளர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். அதற்கு அதிகாரிகள், பணத்தள பொறுப்பாளர் மீதான புகார் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதை ஏற்ற தொழிலாளர்கள், அனைவரும் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்