கம்பத்தில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம்

கம்பத்தில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.

Update: 2019-03-09 22:37 GMT
கம்பம்,

கம்பத்தில் ஆர்.ஆர்.விளையாட்டு கழகம் மற்றும் வீர விளையாட்டு கழகத்தின் 50-ம் ஆண்டுவிழாவையொட்டி கம்பம்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. இந்த போட்டி கம்பம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் இருந்து தொடங்கி கூடலூர் வரை பந்தய இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இந்த போட்டிக்கு ஆர்.ஆர்.விளையாட்டு கழக சங்க தலைவர் ராஜாங்கம் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார். வீர விளையாட்டு கழகத்தின் கவுரவ தலைவர் பொன்காட்சிகண்ணன், தலைவர் அஜ்மல்கான், கம்பம் அ.தி.மு.க. நகர செயலாளர் ஜெகதீஸ், விளையாட்டு கழக செயலாளர் தவமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் பெரியமாடு, நடுமாடு, கரிச்சான் மாடு, பூஞ்சிட்டு, தேன்சிட்டு, தட்டான் சிட்டு, புள்ளிமான் சிட்டு, முயல் சிட்டு உள்ளிட்ட பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. இந்த போட்டியில் பங்கு பெற்ற மாடுகள் பந்தய எல்லையை நோக்கி சீறிப்பாய்ந்து ஓடின. இதையடுத்து வெற்றி வாகை சூடிய மாடுகளின் உரிமையாளர்களுக்கு ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த போட்டியை காண கம்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆர்.ஆர்.விளையாட்டு கழகம் மற்றும் வீர விளையாட் டுக்கழகத்தினர் செய்திருந்தனர். போட்டியில் கலந்து கொண்ட மாடுகளை கம்பம் கால்நடை மருத்துவமனை மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்தனர்.

மேலும் செய்திகள்