பெண் மர்ம சாவு வழக்கில் திருப்பம்: கள்ளக்காதல் விவகாரத்தில் தற்கொலை செய்து கொண்டது அம்பலம் வாலிபர் கைது

பாபநாசம் அருகே, பெண் மர்ம சாவு வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் கள்ளக்காதல் விவகாரத்தில் அந்த பெண் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அவரை தற்கொலைக்கு தூண்டியதாக வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

Update: 2019-03-10 23:00 GMT
பாபநாசம்,

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள பொன்மான்மேய்ந்தநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சார்லஸ் (வயது35). விவசாயி. இவருடைய மனைவி ராஜஸ்ரீ (32). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 9–ந் தேதி ராஜஸ்ரீ, அப்பகுதியில் உள்ள மாமரத்தில் தூக்கில் பிணமாக தொங்கினார்.

அவருடைய உடலை பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகரத்தினம், சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர்கள் செந்தில், அன்பழகன் மற்றும் போலீசார் மீட்டு பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் மர்ம சாவு வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


விசாரணையில் கள்ளக்காதல் விவகாரத்தில் ராஜஸ்ரீ தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் அதே கிராமத்தை சேர்ந்த புதுமைராஜ் (35) என்பவர் ராஜஸ்ரீயை தற்கொலைக்கு தூண்டியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் புதுமைராஜ் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:–

ராஜஸ்ரீக்கும், புதுமைராஜுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்தது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு ராஜஸ்ரீ, புதுமைராஜுடன் மாயமாகி விட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் அவரை மீட்டு கண்டித்து, கணவருடன் அனுப்பி வைத்தோம். இந்த நிலையில் புதுமைராஜ், ராஜஸ்ரீயை செல்போனில் தொடர்பு கொண்டு தகாத உறவுக்கு அழைத்து வந்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த ராஜஸ்ரீ மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இவ்வாறு போலீசார் கூறினார்.

கைது செய்யப்பட்ட புதுமைராஜை போலீசார் பாபநாசம் மாஜிஸ்திரேட் ராஜசேகர் முன்பு ஆஜர்படுத்தினர். அவரை 15 நாட்கள் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். அதன்பேரில் அவர் பாபநாசம் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்