கொள்ளிடம் அருகே கீரங்குடியில் இடிந்து விழும் நிலையில் நடைபாலம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

கொள்ளிடம் அருகே கீரங்குடி கிராமத்தில் நடைபாலம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2019-03-10 22:30 GMT
கொள்ளிடம்,

நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே கீரங்குடி கிராமத்தில் 600-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இங்குள்ள மயானத்திற்கு செல்ல தெற்குராஜன் வாய்க்காலின் குறுக்கே இரும்பு நடைபாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலம் கட்டப்பட்டு 45 ஆண்டுகள் ஆகின்றன.

இறந்தவர்களின் உடல்களை தோளில் சுமந்து செல்லும் நிலை மாறி தற்போது அமரர் ஊர்திகள் மூலம் மயானத்திற்கு உடல்கள் எடுத்து செல்லப்படுகின்றன.

இந்தநிலையில் மேற்கண்ட பாலம் நடைபாலமாக இருப்பதால் பொதுமக்கள் இறந்தவர்களின் உடலை தோளில் சுமந்து மயானத்திற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

இந்தநிலையில் தற்போது பாலம் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.

இதன் காரணமாக அப்பகுதி மக்கள் சேதமடைந்த நடைபாலத்தின் வழியாக இறந்தவர்களின் உடலை எடுத்து செல்ல அச்சப்படுகின்றனர்.

எனவே, தற்போது இடிந்து விழும் நிலையில் உள்ள நடைபாலத்தை உடனடியாக அகற்றிவிட்டு, அமரர் ஊர்தி செல்வதற்கு ஏற்ற வகையிலும், கார் போன்ற வாகனங்கள் சென்று வரும் வகையிலும் தெற்குராஜன் வாய்க்காலின் குறுக்கே பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்