உத்திரமேரூர் அருகே கல்லூரி மாணவர் தற்கொலை முயற்சி போலீசை கண்டித்து உறவினர்கள் மறியல்

உத்திரமேரூர் அருகே புகாரின் மீது நடவடிக்கை எடுக்காததால் கல்லூரி மாணவர் வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனையடுத்து போலீசை கண்டித்து உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2019-03-10 23:00 GMT

உத்திரமேரூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூரை அடுத்த குப்பையநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சஞ்சய் (வயது 20). திருப்புலிவனத்தில் உள்ள அரசு கலை கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

கடந்த வெள்ளிக்கிழமை அந்த கல்லூரியில் மாணவர்கள் கபடி விளையாடியதாக தெரிகிறது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், தோல்வி அடைந்த மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் இருதரப்பினருக்கும் இடையே மோதலாக மாறி அடிதடி ஏற்பட்டுள்ளது.

இந்த மோதலில் ஒரு பிரிவை சேர்ந்த ரோகித் (19), நரேஷ் (19) ஆகியோர் தாக்கப்பட்டனர். இதில் இருவரின் தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டது. அவர்களை சக மாணவர்கள் உத்திரமேரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். காயம் அடைந்த நண்பர்களை பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு சஞ்சய் சென்றார். அவரையும் ஒரு பிரிவினர் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த சஞ்சய், உத்திரமேரூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். ஆனால் அதன்பேரில் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் சஞ்சய் மனமுடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று காலை பூச்சிமருந்தை (வி‌ஷம்) குடித்து தற்கொலைக்கு மாணவர் சஞ்சய் முயன்றார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை உத்திரமேரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த சஞ்சயின் உறவினர்களும், பொதுமக்களும் உத்திரமேரூர் அரசு மருத்துவமனை அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மதுராந்தகம் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் மற்றும் உத்திரமேரூர் இன்ஸ்பெக்டர் ராஜாதாமரைபாண்டியன், சப்–இன்ஸ்பெக்டர் முரளிதரன் ஆகியோர் பொதுமக்களை சமரசம் செய்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்குபதிவு செய்து முறைப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனையடுத்து சாலைமறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்,

மாணவர் சஞ்சய்க்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீசார் மேற்கொண்டு விசாரணை செய்து சம்பந்தப்பட்டவர்களை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்