போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் கலெக்டர் உமா மகேஸ்வரி தொடங்கி வைத்தார்

புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை கலெக்டர் உமா மகேஸ்வரி குழந்தைகளுக்கு சொட்டு மருந்தை வழங்கி தொடங்கி வைத்தார்.

Update: 2019-03-10 23:00 GMT
புதுக்கோட்டை,

புதுக்கோட்டை நகராட்சி காமராஜபுரம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் உமா மகேஸ்வரி தலைமை தாங்கி, குழந்தைகளுக்கு சொட்டு மருந்தை வழங்கி, முகாமை தொடங்கி வைத்தார். இதில் மருத்துவ பணிகள் இணை இயக்குனர் சந்திரசேகரன், சுகாதார பணிகள் துணை இயக்குனர்கள் பரணிதரன், கலைவாணி உள்பட அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அனைத்து அரசு மருத்துவமனைகள், சத்துணவு மையங்கள், பள்ளிக்கூடங்கள், பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள் போன்ற ஆயிரத்து 356 மையங்களில் 5 வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

இந்த முகாமில் ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 243 எண்ணிக்கையிலான 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. முகாமிற்கு தேவையான போலியோ சொட்டு மருந்து 73 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 2 நகராட்சிகளுக்கும் பிரித்து வழங்கப்பட்டது. இந்த முகாமினை சிறப்புற நடத்திட சுகாதாரம், மருத்துவம், வருவாய், சத்துணவு, கல்வி, மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் பல்வேறு அரசு மற்றும் அரசு சாரா துறைகளை சேர்ந்த 5 ஆயிரத்து 634-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

மேலும் பல்வேறு அரசு துறைகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் அந்தந்த ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்து சொட்டு மருந்து மையங்களுக்கு போலியோ சொட்டு மருந்துகளை குறிப்பிட்ட குளிர்பதன நிலையில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஒவ்வொரு சொட்டு மருந்து மையத்திலும் பணியில் இருக்கும் 4 பணியாளர்களும் மையத்திற்கு வரும் அனைத்து குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்கினர். இந்த சொட்டு மருந்து வழங்கும் பணி அடுத்தடுத்த நாட்களில் இரு குழுக்களாக பிரிந்து வீடு வீடாக சென்று விடுபட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்குவார்கள்.

மேலும் வயல்களில் குடியிருப்போர், சாலையோர குடியிருப்புகள், செங்கல் காலவாய் குடியிருப்புகள், கல் குவாரிகள், பஸ் நிலையங்கள், திருவிழா கூட்டங்கள், ரெயில் நிலையங்கள், சுங்க சாவடிகள் போன்ற பகுதிகளில் இருக்கும் குழந்தைகளுக்கு விடுபடாமல் சொட்டு மருந்து வழங்க நடமாடும் குழுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த சொட்டு மருந்து முகாம் அறந்தாங்கி, பொன்னமராவதி, திருவரங்குளம், அன்னவாசல், திருமயம், ஆலங்குடி, கந்தர்வகோட்டை, கறம்பக்குடி, அரிமளம், கீரமங்கலம், ஆவடையார்கோவில், காரையூர், கீரனூர், விராலிமலை, ஆவூர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ஒரு காலத்தில் நாங்கள் தேடி சென்றுதான் போலியோ சொட்டு மருந்து பொட்டுக்கொள்ள வேண்டும். ஆனால் தற்போது அவர்களே எங்களை தேடி வீட்டு வந்து போலியோ சொட்டு மருந்து வழங்குகின்றனர் என்றனர். 

மேலும் செய்திகள்