தேர்தல் நடத்தை விதிமுறை அமல்: திருச்சியில் எம்.எல்.ஏ. அலுவலகங்கள் பூட்டப்பட்டது

தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்ததையொட்டி திருச்சியில் எம்.எல்.ஏ. அலுவலகங்கள் பூட்டப்பட்டது.

Update: 2019-03-10 23:00 GMT
திருச்சி,

இந்திய தேர்தல் ஆணையம் தமிழகத்தில் அடுத்த மாதம் 18-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என்றும், மே மாதம் 23-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வந்ததையடுத்து தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.

இதனை தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, ஸ்ரீரங்கம், திருவெறும்பூர், மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர், மணப்பாறை, லால்குடி ஆகிய 9 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள எம்.எல்.ஏ. அலுவலகங்கள் பூட்டப்பட்டன. எம்.எல்.ஏ. அலுவலகங்கள் பூட்டப்பட்டு, அதற்கான சாவி மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதேபோல் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதால் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் இன்று(திங்கட்கிழமை) நடைபெற இருந்த குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக முகப்பில் வைக்கப்பட்டுள்ள மனு பெட்டியில் போடலாம் என்று தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான சிவராசு தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகள்