ஏமாற்றிய காதலனை திருமணம் செய்து வைக்க கோரி மகளிர் போலீஸ் நிலையம் முன் இளம்பெண் தர்ணா

தன்னை காதலித்து ஏமாற்றிய காதலன் மீது நடவடிக்கை எடுக்க கோரி, லால்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் முன்பு இளம் பெண் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-03-10 22:45 GMT
லால்குடி,

திருச்சி மாவட்டம், சமயபுரம் இனாம்கல்பாளையம் பகுதியை சேர்ந்த சந்திரசேகர் மகன் வெங்கடேஷ்(வயது 28). இவர் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தனியார் சிமெண்டு ஆலையில் உதவி என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். தஞ்சை மாவட்டம் திருவையாறு தேர்முட்டி தெருவை சேர்ந்த பன்னீர்செல்வம் மகள் கண்மணி(25). சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார்.

கண்மணியின் அத்தை மகன் தர்மராஜுக்கு, வெங்கடேஷ் நண்பர் ஆவார். இதனால் டால்மியாவில் உள்ள தர்மராஜ் வீட்டுக்கு வெங்கடேஷ் அடிக்கடி வந்து சென்றுள்ளார். அப்போது அத்தை வீட்டில் தங்கி படித்த கண்மணிக்கும், வெங்கடேசுக்கும் கடந்த 2010-ம் ஆண்டு முதல் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் காதலாக மாறியது.

கடந்த 9 ஆண்டுகளாக 2 பேரும் காதலித்து வந்தனர். கண்மணியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி அவருடன் பலமுறை வெங்கடேஷ் நெருக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வெங்கடேசை கண்மணி வற்புறுத்தினார். ஆனால் வெங்கடேஷ் மறுத்து விட்டார்.

இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கண்மணி, கடந்த 2-ந் தேதி லால்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில், புகார் கொடுத்தார். மனுவை பெற்றுக்கொண்ட இன்ஸ்பெக்டர் கவிதா மனு ரசீது பதிவு செய்தார்.

இந்நிலையில் நேற்று காலை லால்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு சென்ற கண்மணி, போலீஸ் நிலையம் முன்பு அமர்ந்து, தன்னை காதலித்து ஏமாற்றிய வெங்கடேசுடன் திருமணம் செய்து வைக்க கோரி தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார், அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்ததை யடுத்து, கண்மணி அங்கிருந்து சென்றார். 

மேலும் செய்திகள்