தேனி மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமல் - கலெக்டர் தகவல்

மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்து விட்டதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

Update: 2019-03-10 22:45 GMT
தேனி,

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி நாடாளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் பெரியகுளம் (தனி), ஆண்டிப்பட்டி ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் நேற்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.

எனவே, மாவட்டத்தில் உள்ள அரசு துறைகளின் கீழ் கட்டுப்பாட்டில் உள்ள கட்டிடங்கள், வளாகங்கள் மற்றும் சுவர்களில் அரசியல் தொடர்பான விளம்பரங்களை காட்சிப்படுத்துவதோ, ஒட்டுவதோ கூடாது. அவ்வாறு ஏதேனும் விளம்பரங்கள் ஒட்டப்பட்டு இருந்தால் அவற்றை உடனடியாக அப்புறப்படுத்த உத்தரவிடப்படுகிறது.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதால் ஒவ்வொரு திங்கட்கிழமையும் நடக்கும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மற்றும் மக்கள்தொடர்பு முகாம், விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் போன்ற அரசு சார்ந்த நிகழ்ச்சிகள் நடைபெறாது. கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள் அரசு வாகனங்களை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும்.

எனவே, தேர்தல் நடத்தை விதிகளுக்கு அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் தங்களது ஒத்துழைப்பை வழங்கிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்