பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்துவதில் தாமதம்

பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

Update: 2019-03-11 22:45 GMT
பெரம்பலூர்,

17-வது நாடாளுமன்றத்தை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக ஏப்ரல் 11-ந் தேதி முதல் மே மாதம் 19-ந் தேதி வரை நடைபெறுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் ஏப்ரல் 18-ந் தேதி 2-வது கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் தேர்தல் தேதி அறிவித்தவுடன் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது. ஆனால் பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகள் அமல்படுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டது. பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தயார் நிலையில் தேர்தல் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது.

அதன் மூலம் தலைமை தேர்தல் கண்காணிப்பாளர்கள் பெரம்பலூர் தொகுதியை கண்காணித்து வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகைகளில், அரசியல் கட்சியினர் சிலர் தாமாகவே முன்வந்து அப்புறப்படுத்தினர். இதையடுத்து தான் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பெரம்பலூர் நகரில், நகராட்சி பணியாளர்கள் விளம்பர பதாகைகளை அப்புறப்படுத்தி லாரியில் ஏற்றும் பணியில் ஈடுபட்டனர். மேலும் அரசியல் கட்சியினரால் எழுதப்பட்டிருந்த சுவர் விளம்பரங்களின் மீது சுண்ணாம்பு அடித்து அழிக்கப்பட்டு வருகிறது.

ஆனால் பெரம்பலூர் மாவட்டத்தில் தலைவர்கள், அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகள் ஏதுவும் மூடப்படவில்லை. மேலும் கட்சி கொடிகளும், கம்பத்தில் பறந்த வண்ணம் உள்ளன. அதனையும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் அகற்ற வில்லை. நேற்று மதியம் வரை பெரம்பலூர் எம்.எல்.ஏ. அலுவலகம் மூடி சீல் வைக்கப்படவில்லை.

இதனால் அந்த அலுவலகத்தில் தொண்டர்கள் தேர்தல் பணிகளை கவனித்து வந்தனர். மேலும் ஒரு சில இடங்களில் இதுவரை அரசியல் கட்சியினரால் எழுதப்பட்ட சுவர் விளம்பரங்கள் அழிக்கப்படவில்லை. தேர்தல் நடத்தை விதிமுறைகளை பெரம்பலூர் மாவட்டத்தில் முழுமையாக கொண்டுவர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் கட்சியினர், வாக்காளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்