தியாகதுருகம் அருகே பட்டப்பகலில் துணிகரம் பெண்ணை தாக்கி ரூ.2 லட்சம் நகை பறிப்பு - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

தியாகதுருகம் அருகே பட்டப்பகலில் பெண்ணை தாக்கி ரூ.2 லட்சம் நகையை பறித்துச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2019-03-11 22:45 GMT
கண்டாச்சிமங்கலம்,

தியாகதுருகம் அருகே உள்ள மேல்விழி காட்டுக்கொட்டாயை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி சரண்யா (வயது 32). இவர் தியாகதுருகம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் ஆவண எழுத்தராக பணிபுரியும் தனது தந்தைக்கு உதவியாக தினசரி, பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு செல்வது வழக்கம். அந்த வகையில் நேற்று காலை சரண்யா தியாகதுருகம் பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு சென்றார். பின்னர் மாலை 4 மணி அளவில் தனது ஸ்கூட்டரில் வீட்டுக்கு புறப்பட்டார்.

தியாகதுருகம் அருகே திம்மலை ஏரி வழியாக சென்ற போது, ஒரு மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 மர்மநபர்கள் திடீரென சரண்யாவின் ஸ்கூட்டரை வழிமறித்தனர். உடனே சரண்யா பிரேக் பிடித்த போது எதிர்பாராதவிதமாக ஸ்கூட்டரில் இருந்து தவறி விழுந்தார்.

பின்னர் அவர் அங்கிருந்து தப்பி ஓடினார். ஆனால் மர்மநபர்கள் சரண்யாவை மடக்கி பிடித்து சரமாரியாக தாக்கி அவரது கழுத்தில் கிடந்த 8½ பவுன் நகையை பறித்துக் கொண்டு, தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பி சென்றனர். இதில் காயமடைந்த சரண்யாவை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெண்ணிடம் நகையை பறித்துச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். பறிபோன நகையின் மதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. பட்டப்பகலில் பெண்ணை தாக்கி மர்மநபர்கள் நகையை பறித்துச்சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்