நாகை மாவட்டத்தில் இரட்டைமடி வலைகளை பயன்படுத்தினால் நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை

நாகை மாவட்டத்தில் இரட்டைமடி வலைகளை பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சுரேஷ்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2019-03-11 22:30 GMT
நாகப்பட்டினம்,

நாகை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் செய்திக்குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு கடல் ஒழுங்குப்படுத்தும் சட்டம் 1983-ன் படி மீன்வளத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன் சுருக்குமடி, இரட்டைமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பது தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அனைத்து மீனவ கிராமங்களுக்கும் சுருக்குமடி மற்றும் இரட்டைமடி வலைகள் மூலம் மீன்பிடித்தல் கூடாது என கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அவ்வாறு தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி அதிக அளவில் மீன்கள் பிடிக்கப்படுவதால் மீன்களின் இனப்பெருக்கம் தடுக்கப்பட்டு உற்பத்தி பெரிதும் பாதிக்கப்படுகிறது. இதனால் கடலின் அடிப்பகுதியில் உள்ள இயற்கை சூழ்நிலை பாதிக்கப்படுகிறது. மேலும், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துவதனால் மீனவர்களிடையே பிரச்சினை ஏற்பட்டு வருகிறது.

எனவே, நாகை மாவட்ட மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தி மீன்வளத்தை அழிக்கும் சுருக்குமடி மற்றும் இரட்டைமடி வலைகளை பயன்படுத்தும் மீனவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மீனவர்களுக்கு, அரசால் வழங்கப்படும் டீசல் மானியம் மற்றும் இதர உதவிகளும் ரத்து செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்