தேர்தல் பணிகளை கலெக்டர் ஆய்வு

அரியலூர் மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் செய்தி மக்கள் தொடர்புத்துறை மூலம் செயல்பட்டு வரும் ஊடக மையம் மற்றும் ஊடக சான்றிதழ் வழங்கும் குழு அறையில் தேர்தல் குறித்த விளம்பரங்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Update: 2019-03-12 22:45 GMT
அரியலூர்,

இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின்படி, நாடாளுமன்ற தேர்தல்-2019 தேதி அறிவித்தது முதல் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வரப்பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து அரியலூர் மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் செய்தி மக்கள் தொடர்புத்துறை மூலம் செயல்பட்டு வரும் ஊடக மையம் மற்றும் ஊடக சான்றிதழ் வழங்கும் குழு அறையில் தேர்தல் குறித்த விளம்பரங்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதனை தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான விஜயலட்சுமி மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து மாவட்ட கலெக்டர் கூறுகையில், பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக ஊடகங்களில் வெளியாகும் விளம்பரங்களை கண்காணிக்க மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் விளம்பரங்களை 24 மணி நேரமும் கண்காணித்து வருவார்கள். உள்ளூர் தொலைக்காட்சியில் வரும் அரசியல் விளம்பரம் ஒளிப்பரப்புவதற்கு இக்குழுவினரிடம் அனுமதி பெற வேண்டும். பத்திரிகைகளில் வெளிவரும் விளம்பரம், கட்டணம் செலுத்தும் செய்திகள் வெளியிடப்படுவதை கண்காணித்து அதற்கான செலவினக் கணக்குகளை இக்குழுவினர் தாக்கல் செய்வார்கள். அரசியல் கட்சிகளின் ஊடக விளம்பரங்கள் கணக்கீட்டு தொகை அந்தந்த அரசியல் கட்சிகளின் வேட்பாளர் கணக்கில் சேர்க்கப்படும் என்றார். அப்போது அவருடன் மாவட்ட வருவாய் அதிகாரி பொற்கொடி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜெயஅருள்பதி உள்பட பலர் இருந்தனர். 

மேலும் செய்திகள்