பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதிகேட்டு கடலூரில், அரசு கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு நீதிகேட்டு கடலூரில் பெரியார் அரசு கல்லூரியில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

Update: 2019-03-12 23:00 GMT
கடலூர்,

பொள்ளாச்சியில் மாணவியை ஆபாச படம் எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைத்திட வேண்டும்.

மேலும் இதில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய வேண்டும். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் உரிய முறையில் விசாரிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் தேவனாம்பட்டினம் பெரியார் அரசு கல்லூரி மாணவ-மாணவிகள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

கல்லூரி நுழைவு வாசலுக்குள் நடந்த இந்த போராட்டத்துக்கு புரட்சிகர மாணவர், இளைஞர் முன்னணி தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு, பொள்ளாச்சி மாணவிகள், பெண்கை-ளை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியவர்களை கைது செய்து, அவர்களை தூக்கிலிட வேண்டும் போன்ற பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பினர்.

இது பற்றி அறிந்ததும் கடலூர் தேவனாம்பட்டினம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இருப்பினும் இந்த போராட்டத்தால் கல்லூரி வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்