மராட்டியத்தில் எதிர்க்கட்சி தலைவர் மகன் பா.ஜனதாவில் சேர்ந்தார்

மராட்டியத்தில் எதிர்க்கட்சி (காங்கிரஸ்) தலைவர் மகன் பா.ஜனதாவில் சேர்ந்தார். அவருக்கு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படுகிறது.

Update: 2019-03-12 23:30 GMT
மும்பை,

மராட்டியத்தில் காங்கிரஸ் மூத்த தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ராதாகிருஷ்ண விகே பாட்டீலின் மகன் சுஜய் விகே பாட்டீல். நரம்பியல் டாக்டரான இவர், அகமத்நகர் நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்தார்.

ஆனால் அந்த தொகுதி கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டு விட்டது. அந்த தொகுதியை சுஜய் விகே பாட்டீலுக்கு விட்டு கொடுக்க தேசியவாத காங்கிரசும் மறுத்து விட்டது. இதனால் சுஜய் விகே பாட்டீல் பா.ஜனதாவில் சேரப்போவதாக பரபரப்பு ஏற்பட்டது.

இந்த பிரச்சினையில் மகனை சமரசப்படுத்துமாறு ராதாகிருஷ்ண விகே பாட்டீலுக்கு காங்கிரஸ் தலைமை அறிவுறுத்தியது. ஆனாலும் சுஜய் விகே பாட்டீல் சமரசம் அடையவில்லை.

இந்த நிலையில் அவர் நேற்று தென்மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் மராட்டிய மாநில பா.ஜனதா தலைவர் ராவ்சாகேப் தன்வே முன்னிலையில் பா.ஜனதாவில் சேர்ந்தார்.

பின்னர் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பேசுகையில், “சுஜய் விகே பாட்டீலுக்காக அகமத் நகர் தொகுதியை ஒதுக்க கட்சி மேலிடத்துக்கு பரிந்துரை செய்து உள்ளோம். பா.ஜனதாவில் சேருவதற்காக அவர் எந்த நிபந்தனையும் முன்வைக்கவில்லை” என்றார்.

கடந்த தேர்தலில் அகமத் நகர் தொகுதியில் பா.ஜனதாவே வெற்றி பெற்று இருந்தது. தற்போது அந்த கட்சியை சேர்ந்த திலீப் காந்தி எம்.பி.யாக உள்ளார். தனது கட்சி வெற்றி பெற்ற தொகுதியை எதிர்க்கட்சி தலைவர் மகனுக்கு பா.ஜனதா ஒதுக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக அகமத் நகர் தொகுதியை கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரஸ் விட்டுக்கொடுக்காததால் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ராதாகிருஷ்ண விகே பாட்டீல் விரக்தியில் இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் தனது மகன் பா.ஜனதாவில் இணைந்தது குறித்து எந்த அறிக்கையும் அவரது தரப்பில் இருந்து வெளியிடப்படவில்லை.

அதே நேரம் சுஜய் விகேபாட்டீல் தான் பா.ஜனதாவில் இணையப்போவது குறித்து தந்தையிடம் ஆலோசிக்கவில்லை என தெரிவித்தார்.

மேலும் செய்திகள்