வெள்ளமடம் அருகே மின் கம்பி உரசியது: வைக்கோல் ஏற்றி வந்த லாரியில் தீப்பற்றியது

வெள்ளமடம் அருகே மின்கம்பி உரசியதால் வைக்கோல் ஏற்றி வந்த லாரி தீப்பிடித்து எரிந்து நாசமானது.

Update: 2019-03-13 23:00 GMT
ஆரல்வாய்மொழி,

வெள்ளமடம் அருகே பீமநகரி பகுதியில் ஏராளமான விவசாய நிலங்களில் பயிர் செய்யப்பட்ட நெற்பயிர்கள் தற்போது அறுவடை  செய்யப்பட்டு வருகிறது. இதனால், வெளியூர்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் வந்து வைக்கோல்களை வாங்கிச் செல்கிறார்கள்.

நேற்று காலை அஞ்சுகிராமத்தை சேர்ந்த ஒருவர் தனது கால்நடைகளுக்கு தீவனத்திற்காக வைக்கோல்களை வாங்கினார். பின்னர், அவற்றை ஒரு லாரியில் ஏற்றி அஞ்சுகிராமத்துக்கு புறப்பட்டார். லாரியை அஞ்சுகிராமம் கண்ணன்குளத்தை சேர்ந்த ரவி (வயது 50) என்பவர் ஓட்டினார்.

வைக்கோல்களுடன் லாரி சிறிது தூரம் சென்ற போது, எதிரே வந்த ஆட்டோவுக்கு வழி விடுவதற்காக டிரைவர் லாரியை ஒதுக்கினார். அப்போது, மேலே சென்ற உயர் அழுத்த மின் கம்பியில் வைக்கோல் பாரம் உரசியதால் தீப்பற்றியது. இதை கண்ட அப்பகுதி மக்கள் சத்தம் போட்டனர். மேலும், லாரியின் சக்கரம் பள்ளத்தில் சிக்கியதால் நகர்த்த முடியவில்லை. இதனால் டிரைவர் லாரியில் இருந்து இறங்கி தப்பி ஓடினார். வைக்கோலில் பற்றிய தீ மள மளவென பிடித்து எரிந்தது.

உடனே, இதுபற்றி நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அலுவலர் துரை தலைமையிலான வீரர்கள் 2 தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராடி தீயை அணைத்தனர். ஆனாலும், வைக்கோல் முழுவதும் எரிந்து   நாசமானது. லாரியும் சேதமடைந்தது.

மேலும் செய்திகள்