கடமலை-மயிலை ஒன்றியத்தில், மூலவைகை ஆற்றில் மணல் அள்ளும் கும்பல்

கடமலை-மயிலை ஒன்றியத்தில் மூலவைகை ஆற்றில் மணல் அள்ளும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Update: 2019-03-13 22:45 GMT
கடமலைக்குண்டு,

கடமலை-மயிலை ஒன்றியம் வெள்ளிமலை வனப்பகுதியில் போதிய மழை பெய்யாததால், மூலவைகை ஆறு கடந்த சில மாதங்களாக வறண்ட நிலையில் உள்ளது. குறிப்பாக கடமலைக்குண்டு, வருசநாடு, தங்கம்மாள்புரம் ஆகிய பகுதிகளில் மணல் மேடாக காட்சி அளிக்கிறது. இரவுநேரத்தில் அந்த மணலை மாட்டுவண்டி, டிராக்டர், லாரி உள்ளிட்ட வாகனங்கள் மூலம் சிலர் அள்ளி வருகின்றனர்.

மணல் அள்ளும் கும்பலை போலீசாரும், வருவாய்த்துறையினர் கண்டுகொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஒரே இடத்தில் மணல் அள்ளுவதில்லை. ஏனெனில் பள்ளம் ஏற்பட்டு வெளியே தெரிந்து விடும் என்று மணல் அள்ளுவோர் கருதுகின்றனர். இதனால் ஆற்றில் பரவலாக மணல் அள்ளி செல்கிறார்கள்.

நாளுக்குநாள் மணல் அள்ளும் கும்பலின் அட்டூழியம் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதனால் கடமலை-மயிலை ஒன்றியத்தில் மூலவைகை ஆற்றுப்படுகையில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. எனவே மூலவைகை ஆறு பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேபோல கடமலை-மயிலை ஒன்றியத்தில் பஞ்சந்தாங்கி, யானைகஜம், கன்னிமார் ஆகிய ஓடைகளிலும் சிலர் மணல் அள்ளி செல்கிறார்கள்.

இவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும் செய்திகள்