62 பவுன் நகை திருடிய கல்லூரி மாணவர் கைது தாய் வேலை பார்த்த வீட்டிலேயே கைவரிசை

தியாகராயநகரில் தாய் வேலை பார்த்த வீட்டிலேயே 62 பவுன் நகை திருடிய கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-03-13 23:15 GMT
சென்னை,

சென்னை தியாகராயநகர் ராமன் தெருவை சேர்ந்தவர் வைஜெயந்தி (வயது 57). சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக உள்ளார். இவரது வீட்டில் 62 பவுன் தங்க நகைகள் திருட்டு போனது. பீரோவில் இருந்த நகைகளை யாரோ மர்மநபர்கள் கொஞ்சம் கொஞ்சமாக திருடியது தெரியவந்தது.

சமீபத்தில் தான் நகைகள் திருட்டுபோனதை வக்கீல் வைஜெயந்தி கண்டுபிடித்தார். இதுதொடர்பாக சென்னை பாண்டிபஜார் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். வீட்டு வேலைக்காரப்பெண் ஜெயலட்சுமி மீது சந்தேகம் ஏற்பட்டு போலீசார் விசாரித்தனர்.

கல்லூரி மாணவர் கைது

ஆனால் ஜெயலட்சுமி நகை திருட்டில் தனக்கு சம்பந்தம் இல்லை என்று மறுத்தார். ஜெயலட்சுமியின் மகன் விவேக்கும் (20) வக்கீல் வைஜெயந்தி வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வார். அவர் சமீபத்தில் புத்தம்புதிதாக மோட்டார் சைக்கிள் வாங்கி பந்தாவாக சுற்றினார். அவர் மீது சந்தேகம் ஏற்பட்டு போலீசார் விசாரித்தனர்.

விசாரணையில் விவேக் தான் நகைகளை திருடியது தெரியவந்தது. அவர் கல்லூரி ஒன்றில் 2-ம் ஆண்டு படிக்கிறார். அவரை போலீசார் நேற்று கைது செய்தனர். திருடிய நகைகளை விற்று மோட்டார் சைக்கிள் வாங்கியிருப்பது தெரியவந்தது. மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் அவரிடமிருந்து ரூ.7 லட்சத்து 30 ஆயிரம், 5 பவுன் தங்க நகைகளும் மீட்கப்பட்டது.

மேலும் செய்திகள்