நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர் விழிப்புணர்வு பிரசார வாகனம் கலெக்டர் தொடங்கி வைத்தார்

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாகையில் வாக்காளர் விழிப்புணர்வு பிரசார வாகனத்தை கலெக்டர் சுரேஷ்குமார் தொடங்கி வைத்தார்.

Update: 2019-03-13 22:45 GMT
நாகப்பட்டினம்,

நாகை புதிய பஸ் நிலையத்தில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி வாக்காளர் விழிப்புணர்வு பிரசார வாகனத்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டரும், தேர்தல் அலுவலருமான சுரேஷ்குமார் தலைமை தாங்கி, பிரசார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் படி, 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களிடம் வாக்களிப்பதின் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி 100 சதவீதம் வாக்குப்பதிவினை எட்டும் வகையில் வாக்காளர் விழிப்புணர்வு பிரசார வாகனம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் விழிப்புணர்வு குறும்படங்கள் திரையிடுதல், திரைப்பட கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள் உள்பட முக்கிய பிரமுகர்கள் நடித்துள்ள குறும்படங்கள் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் நிலையங்கள், கல்லூரி வளாகங்கள் ஆகிய இடங்களில் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்காளர் அனைவரும் வாக்களித்து ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும். கல்லூரி மாணவ, மாணவிகள் தங்களது உறவினர்கள், நண்பர்கள், ஆகியோரிடம் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (விளம்பரம்) ராம்பாலாஜி, அரசு அலுவலர்கள், கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்