பயங்கரவாதிகள் மீது நடந்த தாக்குதல்: அரசியல் ஆதாயம் தேட பா.ஜனதா முயற்சி சித்தராமையா குற்றச்சாட்டு

பயங்கரவாதிகள் மீது நடைபெற்ற தாக்குதல் விவகாரம் மூலம் அரசியல் ஆதாயம் தேட பா.ஜனதா முயற்சி செய்வதாக சித்தராமையா குற்றம்சாட்டினார்.

Update: 2019-03-13 22:56 GMT
பெங்களூரு,

கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான சித்தராமையா பெங்களூருவில் நேற்று ஒரு தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

போராடி வருகிறோம்

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) தொகுதி பங்கீடு சுமுகமாக முடிவடையும். கர்நாடகத்தில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுவிடலாம் என்று பா.ஜனதா கனவு காண்கிறது. பா.ஜனதாவை தோற்கடிக்க வேண்டும் என்பது தான் எங்களின் குறிக்கோள். இதை எங்கள் கட்சியினர் புரிந்து கொள்வார்கள்.

மதவாத கட்சியான பா.ஜனதாவை ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்ற நாங்கள் போராடி வருகிறோம். இதற்கு ஜனதா தளம்(எஸ்) கட்சியும் ஆதரவு கொடுக்கிறது. காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் இடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை.

சிறிய கருத்து வேறுபாடுகள்

கூட்டணி அரசில் சிறிய அளவில் கருத்து வேறுபாடுகள் எழுவது சகஜமானது தான். பொது செயல் திட்டத்தின் அடிப்படையில் பட்ஜெட்டை தயாரிக்கிறோம். எங்களிடையே பெரிய அளவில் கருத்து வேறுபாடு இல்லை.

தேவேகவுடா எந்த ெதாகுதியில் போட்டியிடுகிறார் என்பது தெரியவில்லை. ஆனால் மைசூரு தொகுதியை விட்டுக்கொடுக்குமாறு கேட்டுள்ளோம். காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சி தொண்டர்கள் ஒற்றுமையாக தேர்தல் பணியாற்ற வேண்டியது அவசியம். எங்களின் எதிரி பா.ஜனதா தான்.

கசப்பான அனுபவங்கள்

கூட்டணி கட்சிகளின் தொண்டர்கள் பழைய கசப்பான அனுபவங்களை மறந்து தேர்தல் பணியாற்ற வேண்டும். பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.

பயங்கரவாதிகள் மீது நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் அரசியல் ஆதாயம் தேட பா.ஜனதா முயற்சி செய்கிறது. ஆனால் அதில் அந்த கட்சி வெற்றி பெறாது. கடந்த சட்டமன்ற தேர்தலில் பிற்படுத்தப்பட்ட பிரிவுகள் என்னை முழுமையாக ஆதரிக்கவில்லை. எனக்கு எதிராக தவறான பிரசாரம் செய்தனர்.

கூட்டணி அரசு கவிழாது

நான் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றினேன். ஆனால் கடலோர பகுதி மக்கள் என்னை கைவிட்டுவிட்டனர். கூட்டணி அரசு கவிழாது. அடுத்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் ஆதரவு வழங்கினால் மீண்டும் முதல்-மந்திரி ஆவேன்.

நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளர்களை வெற்றி பெற வைக்கும் தகுதி உள்ளவன் நான். என்னை விட நல்ல திறமையான வேட்பாளர்கள் எங்கள் கட்சியில் உள்ளனர். நான் எதற்காக நாடாளுமன்ற தேர்தலில் நிற்க வேண்டும்?. குடும்ப அரசியல் பற்றி நான் கருத்து எதுவும் சொல்ல விரும்பவில்லை.

பண பலத்தை தடுக்க...

மக்களின் கைகளில் முடிவு இருக்கிறது. பிற கட்சிகளுக்கு செல்வதை தடுக்க கட்சி தாவல் தடை சட்டம் உள்ளது. பதவியை ராஜினாமா செய்யவும் உரிமை உள்ளது. ஆனால் ராஜினாமாவில் நேர்மை இருக்க வேண்டும்.

தேர்தல்களில் பண பலத்தை தடுக்க வேட்பாளர்களின் செலவை அரசே ஏற்க வேண்டும். அப்போது தான் பண பலத்தை தடுக்க முடியும். மோடியின் ஆட்சியில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துவிட்டது.

வேலையில்லா திண்டாட்டம்

ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாக மோடி சொன்னார். ஆனால் அதன்படி அவர் வேலை வாய்ப்ைப உருவாக்கவில்லை. கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது.

நான் மனிதநேயம் கொண்ட இந்து. ஆனால் பா.ஜனதா தலைவர்கள் மனிதநேயம் இல்லாத இந்துக்கள். தேர்தலில் போட்டியிட பெண்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும். ஆனால் எத்தனை டிக்கெட் கொடுக்கப்படும் என்பதை இப்போது சொல்ல முடியாது.

நம்பிக்கை உள்ளது

பிரதமர் பதவிக்கு ராகுல் காந்தியை ஆதரிப்பதாக தேவேகவுடா கூறியுள்ளார். அதனால் தேவேகவுடா பிரதமராவார் என்ற பேச்சு எழுவது இல்லை.

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா 200 தொகுதிகளுக்கும் கீழ் தான் வெற்றி பெறும். காங்கிரசுக்கு 150-க்கும் அதிகமான இடங்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. மீண்டும் முதல்-மந்திரி ஆக வேண்டும் என்ற எடியூரப்பாவின் கனவு நிறைவேறாது. குறுக்கு வழியில் முதல்-மந்திரியாக வேண்டும் என்பது நினைப்பது தவறு.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

மேலும் செய்திகள்