பிரபல ரவுடி கொலையில் தலைமறைவாக இருந்தார் போலீஸ்காரரை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்ற ரவுடி சுட்டுப்பிடிப்பு பெங்களூருவில் பரபரப்பு சம்பவம்

பிரபல ரவுடி லட்சுமண் கொலையில் தலைமறைவாக இருந்த ரவுடி ஒருவர், போலீஸ்காரரை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்றார். அவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த பரபரப்பு சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது.

Update: 2019-03-13 22:58 GMT
பெங்களூரு,

பெங்களூரு சுங்கதகட்டேயை சேர்ந்தவர் லட்சுமண் (வயது 40). பிரபல ரவுடியான இவர், கடந்த 7-ந் தேதி ராஜாஜிநகர் அருகே ஆர்.ஜி.ரோட்டில் வைத்து மர்மநபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து மகாலட்சுமி லே-அவுட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பின்னர் ரவுடி லட்சுமண் கொலை வழக்கு குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டது. அதன்பேரில், குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் லட்சுமண் கொலை தொடர்பாக ஞானபாரதி அருகே ஜெகஜோதி லே-அவுட்டை சேர்ந்த வர்ஷினி(21), அவரது காதலனான ஆர்.டி.நகரை சேர்ந்த ரூபேஷ், வருண்குமார், மதுகுமார், தேவராஜ், அலோக் ஆகிய 6 பேரையும் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

காதலனுக்கு கொலை மிரட்டல்

இவர்களில் வர்ஷினி ஜனதாதளம்(எஸ்) கட்சி பிரமுகரின் மகள் ஆவார். வர்ஷினியின் தந்தையும், ரவுடி லட்சுமணும் நண்பர்களாக இருந்தனர். இதனால் வர்ஷினி லண்டன் சென்று படிக்க லட்சுமண் பண உதவி செய்திருந்தார். இதற்கிடையில், வர்ஷினியும், ரூபேசும் காதலிப்பதை லட்சுமண் அறிந்தார். உடனே அவர் ரூபேசை கண்டித்துள்ளார். இதுதொடர்பாக அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் ரூபேசை கொலை செய்து விடுவதாக லட்சுமண் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுபற்றி வர்ஷினியிடம் ரூபேஷ் தெரிவித்துள்ளார்.

அதன்பிறகு, வர்ஷினியும், ரூபேசும் திட்டமிட்டு லட்சுமணை கொலை செய்தது தெரியவந்தது. இதற்கிடையில், லட்சுமண் கொலையில் தொடர்புடைய கேட் ராஜாவை கடந்த சில நாட்களுக்கு முன்பும், ரவுடி ஹேமி என்ற ஹேமந்தை நேற்று முன்தினமும் குற்றப்பிரிவு போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்திருந்தனர். இந்த நிலையில், லட்சுமண் கொலையில் தலைமறைவாக இருந்த மற்றொரு ரவுடியை நேற்று அதிகாலையில் போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்த பரபரப்பு சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

போலீஸ்காரர் மீது தாக்குதல்

அதாவது ரவுடி லட்சுமண் கொலையில் பெங்களூரு சோழதேவனஹள்ளியை சேர்ந்த ஆகாஷ் என்ற மாமா(24) தொடர்பு இருப்பதும், அவர் தலைமறைவாக இருப்பதும் ஏற்கனவே கைதானவர்களிடம் நடத்திய விசாரணையின் போது போலீசாருக்கு தெரியவந்தது. அதே நேரத்தில் கைதானவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சுப்பிரமணியபுரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட உத்தரஹள்ளி அருகே பூர்ணபிரஜாநகரில் ஆகாஷ் பதுங்கி இருப்பதும் தெரிந்தது. இதையடுத்து, ஆகாசை பிடிக்க குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேந்திரய்யா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் நேற்று அதிகாலை 5 மணியளவில் பூர்ணபிரஜாநகருக்கு சென்றனர். அங்கு பாழடைந்த வீட்டின் அருகே பதுங்கி இருந்த ஆகாசை போலீசார் சுற்றி வளைத்தனர். பின்னர் ஆகாசை பிடிக்க போலீஸ்காரர் அருண்குமார் முயன்றார். உடனே தான் மறைத்து வைத்திருந்த மிளகாய்பொடியை அருண் குமார் மீது ஆகாஷ் தூவியதுடன், ஆயுதங்களால் அவரை தாக்கினார். இதில், அவரது கையில் காயம் ஏற்பட்டது.

சுட்டுப்பிடிப்பு

இதையடுத்து, வானத்தை நோக்கி ஒருமுறை சுட்டு சரண் அடையும்படி ஆகாசை, இன்ஸ்பெக்டர் முருகேந்திரய்யா எச்சரித்தார். ஆனால் அவர் சரண் அடைய மறுத்துவிட்டு போலீஸ்காரர்களை தாக்க முயன்றார். இதனால் ஆகாசை நோக்கி துப்பாக்கியால் முருகேந்திரய்யா சுட்டார். இதில், அவரது காலில் குண்டு துளைத்தது. இதனால் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்து அவர் துடித்தார். உடனே ஆகாசை மடக்கி பிடித்து போலீசார் கைது செய்தனர்.

பின்னர் உடனடியாக அவர் விக்டோரியா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ஆகாசுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதுபோல, ஆகாஷ் தாக்கியதில் காயம் அடைந்த போலீஸ்காரர் அருண்குமார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். முன்னதாக சம்பவம் நடந்த இடத்தை குற்றப்பிரிவு துணை போலீஸ் கமிஷனர் கிரீஸ் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

ரவுடி

அப்போது ஆகாசும் ரவுடி சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும், அவர் மீது ராமநகர் மாவட்டம் சென்னப்பட்டணா போலீஸ் நிலையத்தில் கொலை, கொள்ளை, கொலை முயற்சி உள்ளிட்ட 4 வழக்குகள் இருப்பதும், சோழதேவனஹள்ளி போலீசில் ஒரு வழக்கு இருப்பதும் தெரிந்தது. மேலும் சென்னப்பட்டணா போலீஸ் நிலையத்தில் ஆகாசின் பெயர் ரவுடி பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

இதையடுத்து, ஆகாஷ் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். ரவுடி லட்சுமண் கொலையில் இதுவரை இளம்பெண் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 3 பேரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்