10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆள்மாறாட்டம்; 3 பேர் கைது

10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மோசடியில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-03-13 23:05 GMT
நாக்பூர்,

மராட்டியத்தில் தற்போது 10, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் நடந்து வருகிறது. இந்த தேர்வுகளில் பணம் வாங்கிக்கொண்டு ஒருவருக்கு பதிலாக மற்றொருவர் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதுவது போன்ற மோசடிகள் நடப்பதாக போலீசாருக்கு புகார்கள் வந்தது. இதனையடுத்து போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அமன் மோட்காரே(வயது 19) என்பவர் போலியான அடையாள அட்டைகளை பயன்படுத்தி பணத்துக்காக மற்றொருவர் தேர்வை எழுதுவது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் கொடுத்த தகவலின் படி இந்த மோசடியில் தொடர்புடைய ஏஜெண்டுகளான அதுல் அவதி(35), சந்திரகாந்த் மேட்(36) என்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த போலி அடையாள அட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

போலீஸ் காவல்

விசாரணையில், அவர்கள் இதே பாணியில் சில வருடங்களாக மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்கள் 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கோர்ட்டு அவர்களை 16-ந் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டது.

இந்த வழக்கில் தொடர்புடைய 17 வயது சிறுவனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்