நகைக்காக மூதாட்டியை கொலை செய்த வழக்கில் 3 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை - புதுச்சேரி கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு

புதுவை மேட்டுப்பாளையத்தில் நகைக்காக மூதாட்டியை கொலை செய்த வழக்கில் 3 வாலிபர்களுக்கு ஆயுள்தண்டனை விதித்து புதுச்சேரி கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு அளித்தது.

Update: 2019-03-13 23:00 GMT
புதுச்சேரி,

புதுச்சேரி மேட்டுப்பாளையம் குருமாம்பேட் பகுதியை சேர்ந்தவர் சுகானந்தம். இவர் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி பிரேமா (வயது 65). சுகானந்தம் காலையில் கடைக்கு சென்றுவிட்டு மாலையில் வீட்டிற்கு திரும்புவது வழக்கம்.

இந்த நிலையில் சுகானந்தம் தனது வீட்டின் அருகே உள்ள மற்றொரு வீட்டினை விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை மாம்பாக்கம் மேப்புலியூரை சேர்ந்த நடனசபாபதி மகன் சிலம்பரசன் (25) என்பவருக்கு வாடகைக்கு விட்டிருந்தார்.

கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் 6-ந் தேதியன்று சிலம்பரசனின் நண்பரான கும்பகோணம் பெருமாண்டிகோவில் தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் வெங்கடேசன் (23), சுவாமிமலை தெற்கு வடம்போக்கி தெருவை சேர்ந்த பிரசாத் (27) ஆகியோர் வாடகைக்கு வீடு பார்ப்பது போல் பிரேமா வீட்டுக்கு சென்றனர்.

அப்போது அவர்கள் 3 பேரும் சேர்ந்து, வீட்டில் தனியாக இருந்த பிரேமாவை கை, கால்களை கட்டி போட்டு, வாயில் பிளாஸ்திரியை ஒட்டி அடித்து கொலை செய்தனர். பின்னர் அவர்கள் பிரேமா அணிந்திருந்த நகைகள், வீட்டில் இருந்த 30 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.

இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சிலம்பரசன், வெங்கடேசன், பிரசாத் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை புதுச்சேரி 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி சுபா அன்புமணி முன்னிலையில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

இதில் 302-ன் பிரிவின்படி பிரேமாவை கொலை செய்ததற்காக சிலம்பரசன், வெங்கடேசன், பிரசாத் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும், 308-ன் பிரிவின்படி நகைகளை திருடியதற்காக 3 பேருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், தலா ரூ. ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் பெருமாள் ஆஜரானார்.

மேலும் செய்திகள்