வாலிபரை கொன்ற வழக்கில் நண்பர்கள் 6 பேருக்கு ஆயுள் தண்டனை மதுரை மாவட்ட கோர்ட்டு தீர்ப்பு

கிரிக்கெட் விளையாடியதில் ஏற்பட்ட முன்விரோதத்தில் வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை மாவட்ட கோர்ட்டு நேற்று தீர்ப்பளித்தது.

Update: 2019-03-13 21:30 GMT
மதுரை,

மதுரை கரிமேடு பகுதியை சேர்ந்தவர் பிரபு (வயது 25). அதே பகுதியை சேர்ந்தவர்கள் சிலம்பரசன் (26), தமிழ்ச்செல்வன் (25). நண்பர்களான இவர்கள் உள்பட அதே பகுதியை சேர்ந்த பலர் அடிக்கடி அதே பகுதியில் கிரிக்கெட் விளையாடுவது வழக்கம். கடந்த 2013-ம் ஆண்டு இவர்கள் வழக்கம் போல கிரிக்கெட் விளையாடினார்கள். அந்த சமயத்தில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதன்காரணமாக அவர்கள் அடிக்கடி மோதிக்கொண்டனர். இதனால் சிலம்பரசன், தமிழ்ச்செல்வன் மற்றும் நண்பர்கள் சேர்ந்து பிரபுவை கொலை செய்ய முடிவு செய்தனர்.

அதன்படி கடந்த 4.2.2013 அன்று கரிமேடு பகுதியில் வைத்து பிரபுவை 7 பேர் கும்பல் அரிவாளால் வெட்டிக்கொலை செய்தது.

இந்த கொலை சம்பவம் குறித்து கரிமேடு போலீசார் வழக்குபதிவு செய்து, சிலம்பரசன், தமிழ்ச்செல்வன், செல்வம் என்ற பரட்டை செல்வம், முருகன், சுந்தரராஜன் என்ற கீரைத்துறை சுந்தர், ஜெயச்சந்திரன் என்ற ஜெயந்த், ரமேஷ் ஆகிய 7 பேரை கைது செய்தனர்.

இந்த வழக்கு மதுரை மாவட்ட 5-வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. அரசு தரப்பில் வக்கீல் ரமேஷ் ஆஜரானார். வழக்கு நிலுவையில் இருந்தபோது செல்வம் என்ற பரட்டை செல்வம் இறந்துவிட்டார்.

விசாரணை முடிவில், கைதான 6 பேர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் அவர்களுக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி மதுசூதனன் நேற்று தீர்ப்பளித்தார்.

மேலும், இறந்த பிரபுவின் பெற்றோருக்கு உரிய இழப்பீட்டை வழங்க மாவட்ட இலவச சட்ட உதவி மையத்துக்கு பரிந்துரை செய்யப்படுகிறது என்றும் தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்