ஊஞ்சலூர் அருகே, ஆசிரியர் வீடு புகுந்து 30 பவுன் நகை-பணம் கொள்ளை - மர்மநபர்களுக்கு வலைவீச்சு

ஊஞ்சலூர் அருகே ஓய்வு பெற்ற ஆசிரியர் வீடு புகுந்து 30 பவுன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2019-03-13 22:30 GMT
ஊஞ்சலூர்,

ஊஞ்சலூர் அருகே ஈரோடு-கரூர் மெயின் ரோட்டில் உள்ளது தாமரைப்பாளையம். இந்த ஊரைச்சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 68). ஓய்வுபெற்ற ஆசிரியர். அவருடைய மனைவி ஈஸ்வரி(59). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். மகன் பெங்களூருவில் வேலை பார்த்து வருகிறார். மகள் திருமணம் ஆகி சென்னையில் உள்ளார். சந்திரசேகரனும், ஈஸ்வரியும் தாமரைப்பாளையத்தில் தனியாக வசித்து வந்தார்கள்.

சந்திரசேகனும் தனது மனைவியுடன் சென்னிமலையில் உள்ள உறவினர் வீட்டுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்று இருந்தார். இந்த நிலையில் 2 பேரும் நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பினர். அப்போது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த இருவரும் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்த துணிமணிகள், பொருட்கள் சிதறி கிடந்தன.

மேலும் பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 30 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரத்தை காணவில்லை. வீட்டில் ஆள் இல்லாததை தெரிந்து கொண்ட மர்ம நபர்கள் இரவு நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். பின்னர் நகை, பணத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பிச்சென்றது தெரிய வந்தது.

இதுபற்றி கொடுமுடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்