திருப்பூரில் 2-வது திருமணம் செய்து பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் கைது

திருப்பூரில் பள்ளி மாணவியை 2-வதாக திருமணம் செய்து பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். மாணவி தனது தாலியை கழற்றி யாருக்கும் தெரியாமல் புத்தகப்பைக்குள் மறைத்து வைத்திருந்தது அம்பலமாகியுள்ளது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

Update: 2019-03-14 22:45 GMT
திருப்பூர்,

திருப்பூரை சேர்ந்த 16 வயது மாணவி ஒருவர் ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் இவருடைய தாயார், மாணவியின் புத்தகப்பையை எடுத்து பார்த்துள்ளார். அப்போது அந்த பைக்குள் மஞ்சள் கயிறுடன் தாலி, மெட்டி இருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண், தனது மகளிடம் இதுகுறித்து விசாரித்தார்.

அப்போது அந்த மாணவி, திருப்பூர் காலேஜ் ரோடு காமராஜர் நகரை சேர்ந்த தினேஷ்(வயது 22) என்பவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தன்னை ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்துக்கு அழைத்துச்சென்று தாலி கட்டி திருமணம் செய்ததாகவும், அந்த தாலியை யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்திருந்ததாகவும் தெரிவித்தாள்.

இதனால் மனம் உடைந்த மாணவியின் தாயார், தனது மகளின் நிலையை நினைத்து அழுது புரண்டார். பின்னர் உடனடியாக இதுகுறித்து திருப்பூர் வடக்கு மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், அந்த மாணவி 9-ம் வகுப்பு கோடை விடுமுறையில் பனியன் நிறுவனத்துக்கு வேலைக்கு சென்றுள்ளது. அப்போது அங்கு பணியாற்றிய தினேசுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அதன்பிறகு தினேஷ், அந்த மாணவியை கோபிச்செட்டிப்பாளையத்துக்கு அழைத்துச்சென்று அங்குள்ள கோவிலில் வைத்து தாலி கட்டி திருமணம் செய்துள்ளார். பின்னர் யாரும் இல்லாத நேரத்தில் மாணவியின் வீட்டுக்கு சென்று தனிமையில் இருந்ததும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து தினேசை பிடித்து போலீசார் விசாரித்தபோது அவருக்கு ஏற்கனவே ஒரு பெண்ணுடன் திருமணம் முடிந்து ஒரு குழந்தை இருப்பது கண்டறியப்பட்டது.

இதனால் அந்த மாணவி அதிர்ச்சி அடைந்தார். ஏற்கனவே திருமணம் செய்ததை மறைத்து தன்னை ஏமாற்றி 2-வது திருமணம் செய்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தினேஷ் மீது போலீசில் புகார் தெரிவித்தார்.

இதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரம்மாள், ஏட்டு வனஜா ஆகியோர் தினேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்