பொள்ளாச்சி கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி - திண்டிவனம் அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டம்

பொள்ளாச்சி சம்பவத்தில் தொடர்புடைய கும்பல் மீது கடும் நடவடிக் கை எடுக்க கோரி திண்டிவனத்தில் அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-03-14 22:45 GMT
திண்டிவனம்,

பொள்ளாச்சியில் மாணவிகள் மற்றும் இளம்பெண்களை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்து ஆபாச படம் எடுத்து மிரட்டிய கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் தலைமையில் விசாரணை குழு நியமித்து பொள்ளாச்சி சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவருக்கும் கடுமையான தண்டனை பெற்று தர கோரி தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள், பொது சேவை அமைப்பினர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் பொள்ளாச்சி பாலியல் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படிக்கும் மாணவ-மாணவிகள் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நேற்று காலை வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாணவிகள், இளம்பெண்களை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த பொள்ளாச்சி கும்பலுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று கண்டன கோஷம் எழுப்பினார்கள். இதுபற்றி தகவல் அறிந்த ரோஷணை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை சமாதானப்படுத்தி கலைந்து போக செய்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோல் விழுப்புரம் அரசு கலைக்கல்லூரி மாணவர்களும் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று வகுப்புகளை புறக்கணித்து சென்றனர்.

மேலும் செய்திகள்