சென்னை விமான நிலையத்தில் ரூ.46 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் ரூ.1 லட்சம் மயில் இறகும் சிக்கியது

சென்னை விமானநிலையத்தில் ரூ.46 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் ரூ.1 லட்சம் மதிப்புள்ள மயில் இறகும் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2019-03-14 23:15 GMT
ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்திற்கு அகமதாபாத்தில் இருந்து வரும் விமானத்தில் பெரும்அளவு தங்கம் கடத்தப்பட்டு வருவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து உள்நாட்டு முனையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர்.

அப்போது ராமநாதபுரத்தை சேர்ந்த வாலிபரை சந்தேகத்தின்பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்தனர். அவர் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த ரூ.46 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 400 கிராம் தங்கக்கட்டிகளை பறிமுதல் செய்தனர்.

கொழும்பில் இருந்து கடத்தல்

இதுதொடர்பாக வாலிபரை கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அதில் கொழும்பில் இருந்து சென்னை வந்த விமானம் உள்நாட்டு விமானமாக அகமதாபாத் சென்றது. அதே விமானம் அகமதாபாத்தில் இருந்து சென்னை வந்தபோது, அதில் அந்த வாலிபர் பயணம் செய்துள்ளார்.

பன்னாட்டு விமானநிலையத்தில் கெடுபிடி அதிகமாக இருக்கும் என்பதால், வெளிநாட்டில் இருந்து தங்கம் கடத்தி வருபவர்கள் அதை விமானத்தில் மறைத்து வைத்து சென்று விடுவார்கள். பின்னர் அந்த விமானம் உள்நாட்டு விமானமாக வரும்போது அதில் பயணம் செய்யும் கடத்தல்காரர்கள் அதிகாரிகள் கெடுபிடி இன்றி தங்கத்தை கடத்தி சென்று விடுகிறார்கள். இதேபோல் தங்கம் கடத்தப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மயில் இறகு பறிமுதல்

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து மலேசியாவிற்கு விமானம் செல்ல இருந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர்.

அப்போது சுற்றுலா விசாவில் மலேசியாவிற்கு செல்ல வந்த சென்னையை சேர்ந்த வாலிபர் ஒருவர் மீது சந்தேகம் கொண்டு விசாரித்தனர். பின்னர் உடைமைகளை சோதனை செய்தனர். அப்போது அவர், மயில் இறகுகளை கட்டுகட்டாக மறைத்து கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது. ரூ.1 லட்சம் மதிப்புள்ள 18 கிலோ எடை கொண்ட மயில் இறகுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மலேசியாவில் மயில் இறகுகள் நல்ல விலைக்கு விற்கப்படுவதால் அவர் கடத்த முயற்சித்துள்ளார். மயில் இறகுகள் எங்கு சேகரிக்கப்பட்டது? என்பது போன்ற விவரங்களை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இது பற்றி சென்னை வனத்துறைக்கும் சுங்க இலாகா அதிகாரிகள் தகவல் தந்து உள்ளனர்.

மேலும் செய்திகள்