சிதம்பரம், நெய்வேலியில் கல்லூரி மாணவ-மாணவிகள் போராட்டம் , பொள்ளாச்சி சம்பவத்தில் தொடர்புடையவர்களை தூக்கிலிட வலியுறுத்தல்

பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கில் தொடர்புடையவர்களை தூக்கிலிட வலியுறுத்தி சிதம்பரம், நெய்வேலியில் கல்லூரி மாணவ-மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-03-14 23:00 GMT
சிதம்பரம்,

பொள்ளாச்சியில் மாணவிகள் மற்றும் இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து ஆபாச படம் எடுத்த வழக்கில் சபரிராஜன், சதீஷ், வசந்த குமார், திருநாவுக்கரசு ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்த விசாரணை சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தை கண்டித்தும், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கக்கோரியும் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மாணவ-மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் நெய்வேலி புதுநகர் 14-வது வட்டத்தில் உள்ள ஜவகர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு வழக்கம்போல் நேற்று காலை மாணவ-மாணவிகள் வந்தனர். ஆனால் அவர்கள் வகுப்பறைக்கு செல்லாமல், நுழைவு வாயில் முன்பு ஒன்று கூடினர்.

அப்போது சீனியர் மாணவ-மாணவிகள் கூறுகையில், பொள்ளாச்சியில் மாணவிகள், இளம்பெண்கள பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், பலாத்கார வழக்கில் கைதானவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்க வலியுறுத்தியும் போராட்டம் நடத்துவோம் என்று கூறினர். இதற்கு அனைத்து துறைகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து கோஷமிட்டனர்.

இது பற்றி தகவல் அறிந்ததும் நெய்வேலி துணை போலீஸ் சூப்பிரண்டு லோகநாதன், இன்ஸ்பெக்டர்கள் ரவீந்திரராஜ், ஜெய்ஹிந்த் தேவி மற்றும் போலீசார் விரைந்து வந்து, மாணவ-மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாணவ-மாணவிகள், பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து பேரணியாக சென்று, அமைதியாக கலைந்து செல்கிறோம் என்றனர். அதற்கு போலீசார் அனுமதி அளித்தனர்.

இதையடுத்து கல்லூரியில் இருந்து மாணவ-மாணவிகள், பேரணியாக புறப்பட்டனர். பேரணியில் பங்கேற்றவர்கள், பொள்ளாச்சியில் மாணவிகள் மற்றும் இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தவர்களை தூக்கிலிட வேண்டும், இந்த சம்பவத்தில் முழுமையாக விசாரிக்காத காவல்துறை அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும், பெண்கௌ பாதுகாக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷமிட்டனர். சூப்பர் பஜார், மெயின் பஜார் வழியாக சென்ற பேரணி மீண்டும் கல்லூரியை வந்தடைந்தது. பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் துறை மாணவ-மாணவிகள் நேற்று காலை 10.45 மணிக்கு வகுப்புகளை புறக்கணித்து பொறியியல் துறை கல்லூரி வளாகம் முன்பு ஒன்று திரண்டனர். பின்னர் அனைவரும் தரையில் அமர்ந்து பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்தும், இந்த வழக்கில் கைதானவர்களை தூக்கிலிட வலியுறுத்தியும் கோஷமிட்டனர்.

இது பற்றி தகவல் அறிந்ததும் அண்ணாமலைநகர் போலீசார் விரைந்து வந்து, மாணவ-மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மாணவ-மாணவிகள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூர் அரசு கலை கல்லூரி மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து, கல்லூரி வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவிகள், பெண்களுக்கு நியாயம் கேட்டும், சம்பவத்தில் தொடர்புடையவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க கோரியும், பெண்களை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க கோரியும் கோஷமிட்டனர்.

இது பற்றி தகவல் அறிந்ததும் கிள்ளை போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவ-மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மாணவ- மாணவிகள் அனைவரும் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்