ஈரோட்டில், மாணவ-மாணவிகள் மனிதசங்கிலி போராட்டம் - பாலியல் வழக்கில் கைதான 4 பேரின் உருவப்படங்களை எரித்தனர்

ஈரோட்டில் மனிதசங்கிலி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ-மாணவிகள், பாலியல் வழக்கில் கைதான 4 பேரின் உருவப்படங்களை எரித்தனர்.

Update: 2019-03-14 23:00 GMT
ஈரோடு, 

பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து ஆபாசமாக படம் எடுத்து மிரட்டிய கும்பலை கண்டித்து தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி ஈரோடு திண்டல் வேளாளர் கல்லூரியில் படிக்கும் மாணவ-மாணவிகள் நேற்று மதியம் போராட்டம் நடத்துவதற்காக பெருந்துறை ரோட்டுக்கு திரண்டு வந்தனர்.

பின்னர் அவர்கள், பாலியல் வழக்கில் கைதான திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகிய 4 பேரின் உருவப்படங்களை எரித்து தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்தினார்கள். அதைத்தொடர்ந்து அவர்கள், பெண்களை பாதுகாக்க வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

பின்னர் மாணவ-மாணவிகள் திண்டல் முருகன் கோவில் பஸ் நிறுத்தம் அருகில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள், ‘பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கும், பெண்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும். கைதான 4 பேரையும் தூக்கிலிட வேண்டும்’ என கோஷங்கள் எழுப்பினார்கள்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஈரோடு தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ -மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். மேலும் போலீசார், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் போராட்டம் நடத்த அனுமதி இல்லை. எனவே தொடர்ந்து போராட்டம் நடத்தினால் கைது செய்யப்படுவீர்கள்’ என மாணவ-மாணவிகளை எச்சரித்தனர். அதைத்தொடர்ந்து மாணவ-மாணவிகள் தங்களது போராட்டத்தை கைவிட்டு கல்லூரிக்கு சென்றனர்.

மேலும் செய்திகள்