நெல்லையில் அடுத்தடுத்த வீடுகளில் நகை, பணம் கொள்ளை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

நெல்லையில் அடுத்தடுத்த வீடுகளில் நகை, பணம் கொள்ளை அடிக்கப்பட்டது. இதுதொடர்பாக மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

Update: 2019-03-14 22:00 GMT
நெல்லை,

நெல்லை மேலப்பாளையம் சந்தை பகுதி மெயின் காலனி 9-வது தெருவை சேர்ந்தவர் ஆரீஸ் (வயது 40). இவர் ஓட்டலில் மேலாளராக வேலை செய்து வருகிறார். இவருடைய உறவினருக்கு உடல் நலம் சரியில்லாததால், ஆரீஸ் மனைவி மற்றும் குடும்பத்தினர் உறவினர் வீட்டுக்கு சென்று விட்டனர். ஆரீஸ் மட்டும் அவ்வப்போது வீட்டுக்கு சென்று வந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை ஆரீஸ் வீட்டுக்கு சென்ற போது முன்பக்க இரும்பு கதவு மற்றும் மரக்கதவில் பூட்டுகள் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தன. உள்ளே சென்று பார்த்த போது அங்கு பீரோக்கள் உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறிக்கிடந்தன. பீரோவில் வைக்கப்பட்டிருந்த 10 பவுன் தங்க நகைகள், ரூ.30 ஆயிரம் ஆகியவை காணவில்லை. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவு, பூட்டுகளை உடைத்து உள்ளே புகுந்து நகை, பணத்தை கொள்ளை அடித்து சென்று உள்ளனர்.

மேலும் அருகே உள்ள அபுபக்கர் சித்திக் என்பவரது வீட்டிலும் கதவை உடைத்து மர்ம நபர்கள் புகுந்தனர். ஆனால் அங்கு ஆட்கள் குடியேறாததால், பொருட்கள் எதுவும் இல்லை.

மேலும் அருகில் உள்ள சக்திவேல் நகரை சேர்ந்தவர் கணபதி (60) என்பவர் நேற்று முன்தினம் மனைவியுடன், மகள் வீட்டிற்கு சென்று விட்டார். இதை அறிந்த மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். அந்த வீட்டில் இருந்த பீரோ, தகரப்பெட்டி ஆகியவற்றை உடைத்து பொருட்களை சிதறி உள்ளனர். அந்த வீட்டில் இருந்த ரூ.4 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி கொலுசுகளை கொள்ளை அடித்துச் சென்று விட்டனர். மேலும் மர்ம நபர்கள் அந்த வீட்டில் கத்தி மற்றும் சைக்கிள் சாவிகளை போட்டு விட்டு சென்று விட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த மேலப்பாளையம் மற்றும் பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும் அங்கு வந்து கொள்ளையர்களின் தடயங்களை சேகரித்தனர். இதுதொடர்பாக பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள். 

மேலும் செய்திகள்