களியக்காவிளை அருகே சப்-இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல் ஒருவர் கைது

களியக்காவிளை அருகே சப்-இன்ஸ்பெக்டரை தாக்கியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2019-03-15 22:30 GMT
களியக்காவிளை,

களியக்காவிளை அருகே பளுகல் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக இருப்பவர் வில்சன். இவர் இளஞ்சிறை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (வயது 47) என்பவர், ஒரு ஓட்டலில் சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்காமல் தகராறு செய்தார். ஓட்டல் உரிமையாளர் சசி பணத்தை கேட்டதால் அவர்களுக்குள் மோதல் ஏற்படும் சூழல் உருவானது.

இதனை பார்த்த சப்-இன்ஸ்பெக்டர் வில்சன், இருவரையும் தடுத்து நிறுத்தினார். அதே சமயத்தில், சாப்பிட்டதற்கு பணம் கொடுக்க மறுத்த ராஜ்குமாரை தட்டிக்கேட்டார்.

இதனால், ஆத்திரமடைந்த ராஜ்குமார், அருகில் கிடந்த கம்பு மற்றும் கல்லால் வில்சனை சரமாரியாக தாக்கி விட்டு தப்பி செல்ல முயன்றார். உடனே, அக்கம் பக்கத்தில் நின்ற பொதுமக்கள் அவரை சுற்றிவளைத்து பிடித்து, பளுகல் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

ராஜ்குமார் தாக்கியதில் சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் படுகாயம் அடைந்தார். அவர் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இதுதொடர்பாக பளுகல் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜ்குமாரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்