போக்குவரத்துக்கழக ஊழியர் கூட்டுறவு சங்கத்தில் ரூ.53½ லட்சம் கையாடல் செய்ததாக தலைவர் கைது - விழுப்புரத்தில் பரபரப்பு

விழுப்புரத்தில் தந்தை பெரியார் போக்குவரத்துக்கழக ஊழியர் கூட்டுறவு வீடு கட்டும் சங்கத்தில் ரூ.53½ லட்சம் கையாடல் செய்ததாக, அந்த சங்கத்தின் தலைவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2019-03-15 23:00 GMT
விழுப்புரம்,

விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழக தலைமை அலுவலகம் அருகில் தந்தை பெரியார் போக்குவரத்துக்கழக ஊழியர் கூட்டுறவு வீடு கட்டும் சங்கம் உள்ளது. இந்த சங்கத்தில் தலைவராக சங்கராபுரம் தாலுகா சோமண்டார்குடியை சேர்ந்த நடராஜன் (வயது 60) என்பவர் இருந்து வருகிறார்.

இவரும் சங்க செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் கூட்டாக சேர்ந்து பணத்தை கையாடல் செய்துள்ளதாக எழுந்த புகாரின் அடிப்படையில் சங்கத்தின் கடலூர் மண்டல துணைப்பதிவாளர் ஜெயபாலன் தலைமையிலான அதிகாரிகள், அச்சங்கத்தில் திடீர் தணிக்கை மேற்கொண்டு வரவு, செலவு கணக்குகளை ஆய்வு செய்தனர்.

அப்போது, சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு வீட்டுமனைகள் வாங்குவதற்காக அவர்களது ஊதியத்தில் பிடித்தம் செய்த தொகையில் வீட்டுமனை வாங்கிக்கொடுக்காமல் பணத்தை கையாடல் செய்திருப்பது தெரியவந்தது.

இதுதவிர சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி பண்டிகை காலங்களில் பட்டாசு பெட்டிகளை வாங்கி கொடுத்த வகையில் போலியான ரசீது தயாரித்து பணத்தை கையாடல் செய்துள்ளதும், காசோலை மாற்றம் மூலமாகவும் பணம் கையாடல் செய்திருப்பதும் இவ்வாறாக கடந்த 1.4.2014 முதல் 28.2.2017 வரை ரூ.53 லட்சத்து 51 ஆயிரத்து 701 அளவிற்கு கையாடல் நடந்துள்ளது கண்டறியப்பட்டது.

இந்த கையாடலில் சங்க தலைவர் நடராஜன், செயலாளர்களான விழுப்புரம் கே.கே.சாலையை சேர்ந்த சாந்தி, வளவனூர் ரவிசங்கர், துணை மேலாளர்களான விருத்தாசலத்தை சேர்ந்த வேல்முருகன், காட்பாடியை சேர்ந்த கண்ணன், விழுப்புரம் துர்க்கைசாமி, நிதி ஆலோசகரான ஈரோட்டை சேர்ந்த முனியப்பன், முதன்மை தணிக்கை அலுவலரான திருவெண்ணெய்நல்லூரை சேர்ந்த கவியரசு ஆகிய 8 பேர் கூட்டாக சேர்ந்து ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து துணைப்பதிவாளர் ஜெயபாலன், விழுப்புரம் வணிக குற்றப்புலனாய்வு பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் நடராஜன், சாந்தி, ரவிசங்கர் உள்ளிட்ட 8 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இந்த கையாடல் தொடர்பாக நடராஜனை போலீசார் கைது செய்து விழுப்புரம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி விழுப்புரம் வேடம்பட்டில் உள்ள மத்திய சிறைச்சாலையில் அடைத்தனர். கைதான நடராஜன் ஏற்கனவே அ.தி.மு.க.வில் அண்ணா தொழிற்சங்க பொதுச்செயலாளராக, இருந்ததும் அதன் பிறகு கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் ஊழியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்